திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தயாரிக்கப்படும் தம்ரூட் கேக் ஊரின் அடையாளமாக விளங்குகிறது. திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என ஊரின் பெயரை அடையாளப்படுத்தும் இனிப்பு- பலகார வகைகளில் கூத்தாநல்லூர் தம்ரூட் கேக்கும் ஒன்று. வெளியே சாக்லேட் நிறத்திலும், உ ள்ளே மஞ்சள் நிறத்திலும் பன் கேக் போல் காட்சி தரும் தம்ரூட்டுக்குள் ஒளிந்து இருக்கிறது அமுத ருசி.
தம்ரூட் செய்முறை குறித்து, கூத்தாநல்லூர் ஆக்பியா பேக்கரி உரிமையாளர் பி.கே.எம். அப்துல் மாலிக் கூறியது: மண் சட்டியில் பாதியளவுக்கு மணலைக் கொட்டி, அடுப்பில் வைக்க வேண்டும். மணல் சூடாகிக் கொண்டிருக்கும். மற்றொரு புறத்தில், இன்னொரு பெரிய அகன்ற தவாவில் 5 கிலோ சீனியில், 50 முட்டைகளை உடைத்து ஊற்றி, இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும்.10 லிட்டர் பாலை, 5 லிட்டராகும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் சீனி கலந்த முட்டையை அதில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். அதன்பிறகு, எருமைப்பாலில் எடுக்கப்பட்ட மூன்றரை லிட்டர் நெய்யை ஊற்ற வேண்டும். சொட்டுத் தண்ணீர் கூட ஊற்றக்கூடாது. மீண்டும் நன்றாக கலக்க வேண்டும். தொடர்ந்து 7 கிலோ ரவையை அதில் கொட்டி கலக்க வேண்டும். ஒவ்வொருமுறையும் நன்றாக கலக்க வேண்டும். தனி தவாவில் வைத்து கலக்கப்பட்ட அனைத்தையும் 4 மணி நேரத்திற்கு மூடி வைக்க வேண்டும். கொட்டப்பட்டுள்ள ரவை நன்றாக நசிந்து ஊறிய பிறகு மீண்டும் கிளறி விட்டு, வெண்கலச்சட்டி மூலம் மணல் அடுப்பில் வைத்துவிட வேண்டும். அதன் மீது, முந்திரிப் பருப்புகளை தூவிவிட வேண்டும். இப்போது கிண்டி விடக்கூடாது. 3 மணி நேரத்துக்கு மூடப்பட வேண்டும். மணல் சூட்டிலேயே இருக்க வேண்டும். 3 மணி நேரத்துக்குப் பிறகு திறந்து ஒரு குச்சியை விட்டுப் பார்த்தால் மாவு ஒட்டாமல் எண்ணெய் ஒட்டியிருந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். இதுதான் தம்ரூட். மணல் சட்டியிலிருந்து, தம்ரூட் அண்டாவை எடுத்து, காடா துணியில் வைத்து கட்டி வைத்து விட வேண்டும். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தேவையான அளவுக்கு கட் பண்ணலாம். இந்த தம்ரூட்டானது திருமணக்காலங்களில் மாப்பிள்ளைக்கு கொடுக்கப்படுவதில் முக்கியமான இடத்தை வகிக்கிறது. தற்போது தம்ரூட் செய்ய மின்சார அடுப்பும், ஆர்.கே.ஜி. நெய்யும் பயன்படுத்தப்படுகிறது என்றார் அவர்.
சோ. தெஷ்ணாமூர்த்தி, கூத்தாநல்லூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.