கொல்லிமலை புளி

சேலம் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது தம்மம்பட்டி பேரூராட்சி. தம்மம்பட்டியையொட்டியுள்ளது கொல்லிமலை. இங்கு வேலிக்காடு, கீரைக்காடு, குண்டனிநாடு,
கொல்லிமலை புளி
Updated on
2 min read

சேலம் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது தம்மம்பட்டி பேரூராட்சி. தம்மம்பட்டியையொட்டியுள்ளது கொல்லிமலை. இங்கு வேலிக்காடு, கீரைக்காடு, குண்டனிநாடு, ஆழரிப்பட்டி, மேல உழவு, கீழஉளவு, எட்டடிப்பாறை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.
 இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. இப் பகுதியில் உள்ள சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தங்களின் குடும்பச் சொத்தாக புளியமரங்களை பராமரித்து வருகின்றனர்.
 புளியமரங்களில் புளியம்பழங்கள் பிப்ரவரி மாத இறுதியிலிருந்து மே மாதம் வரை காய்த்துக் குலுங்கும். இவற்றை அப் பகுதிகளில் அந்தந்த புளிய மரங்களின் சொந்தக்காரர்கள், மரங்களின் மேலே சென்று உலுக்குவர்.
 அப்போது மரங்களிலிருந்து கொத்தாக, புளியம்பழங்கள் தரையில் கொட்டும். இவற்றை சாக்குகளில் சேகரித்து தங்கள் (மலைப் பகுதியில்) வீடுகளுக்குக் கொண்டு வருகின்றனர். அங்கு புளியம்பழங்களின் ஓடுகளை நீக்குவர். ஓடுகள் நீக்கப்பட்ட புளியம்பழங்களை தங்களின் மூங்கில் கூடைகளில் அடுக்கி அங்கிருந்து வாடகை ஆட்டோ, டெம்போ, வேன் மூலம் சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் புதன்கிழமை நடைபெறும் வாரச்சந்தைக்கு செவ்வாய்க்கிழமையே கொண்டு வருகின்றனர். அதனால், செவ்வாய்க்கிழமை புளிச்சந்தை என்று அழைப்பதும் உண்டு. தாங்கள் கொண்டு வந்துள்ள புளிக்கூடைகளை சந்தைக்குச் செல்லும் சாலையோரத்தில் வரிசையாக வைப்பர்.
 
 கொல்லிமலைப்புளியின் வருகை அறிந்து பெரம்பலூர், துறையூர், திருச்சி, வீரகனூர், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, தலைவாசல், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாகனங்களுடன் வியாபாரிகள் வந்து விடுகிறார்கள். கொல்லிமலைப் புளியின் ருசிக்கு இந்தப் பகுதியினரிடத்தில் வரவேற்புஅதிகம். எனவே, செவ்வாய்க்கிழமை மாலைக்குள் புளிக்கூடைகள் விற்று வெறும் கூடைகளாகிவிடும்.
 வழக்கமாக ஒரு கிலோ புளி ரூ. 40 லிருந்து ரூ. 100 வரையிலும் அந்தந்த ஆண்டுகளில் புளியின் வரத்துக்கு ஏற்ப விற்பனையாவது வழக்கம். அதேபோல் சீசன் துவக்கத்தில் குறைந்த விலையிலும், சீசன் உச்சத்தில் அதிக விலைக்கும் விற்கப்படுவது வழக்கம். அதேபோல் புளியை சுற்றுவட்டார பொதுமக்களும் வருடத்துக்கு என ஒட்டு மொத்தமாக வாங்கி இருப்பு வைக்கும் குடும்பத் தலைவிகளும் அதிகம். இதுகுறித்து வருடந்தோறும் தம்மம்பட்டிக்கு வந்து வாங்கும் திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறியது:
 30 கிலோ புளியைக் கொட்டையுடன் வாங்கி வைத்து, உரலில் போட்டு கொட்டைகளை எடுத்துவிடுவோம். கொட்டை எடுக்கப்பட்ட புளியை , மண் பானைக்குள் வைத்து விடுவோம். எப்போதும்போல புளி நன்றாக இருக்கும் என்றார்.
 வெளிமாவட்ட வியாபாரிகள் கூறியதாவது: தம்மம்பட்டிக்கு வந்தால் ருசி மிகுந்த கொல்லிமலைப்புளி வரும். சீசன்நேரத்தில் ஆட்டோவில் வந்து ஒட்டுமொத்தமாக வாங்கி வைத்து வருடம் முழுவதும் சில்லரை விற்பனையில் விற்போம். கொல்லிமலைப்புளி ருசி மிகுந்தது என்பதால் அதற்கு கிராக்கி அதிகம் என்றார். கொல்லிமலையிலிருந்து தலைச் சுமையாகவும், அதன்பின் வாகனங்களிலும் வைத்து தம்மம்பட்டிக்கு புளியைக் கொண்டுவந்து சேர்க்கும் கொல்லிமலை மக்கள் கூறியதாவது:
 எங்களுக்கு வருடாந்திர வருமானத்தில் முக்கியப் பங்காக இருப்பது புளி. சீசன் நேரத்தில் எங்கள் குடும்பத்தில் 5 பேர் முதல் 8 பேர் வரை கூடை ஒன்றுக்கு 35 கிலோ முதல் 55 கிலோ வரை கொண்டு வருவோம். அந்த வருடம் நல்ல விளைச்சல் இருந்தால், எங்களுக்கு நல்ல வருமானமாக இருக்கும். தம்மம்பட்டியில் புளி மூலம் வருமானம் கிடைத்த கணிசமான தொகையை, எங்கள் குடும்பத் தேவைகளுக்கு அன்றே தம்மம்பட்டியிலேயே செலவிட்டு, பொருள்களாக மாற்றி திரும்பவும் எங்களது வாடகை வாகனத்திலேயே சென்று விடுவோம். புளியம்பழங்கள், எங்கள் வாழ்க்கை வருமானத்துக்குக் கிடைத்த இனிப்பான பழங்கள் என்றனர்.
 தம்மம்பட்டியிலிருந்து கொல்லிமலை செம்மேடு வரைத் தொடர்ந்து தார்ச் சாலையை தமிழக அரசு அமைத்துத் தந்தால், வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதுடன், கொல்லிமலைப் புளியால் கிடைக்கும் பெருந்தொகை, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உறுதுணையாக இருக்கும் என்றால் மிகையில்லை.
 எஸ். ரம்யா
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com