

நாம் அனைவரும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) குறித்து கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நம்மில் பலருக்கு யுபிஎஸ்சி குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யுபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வு உள்பட பல்வேறு விதமான தேர்வுகளை நடத்துகிறது. குடிமைப் பணி தேர்வு மட்டுமல்லாது மேலும் பல சவாலான தேர்வுகளை நடத்தி இந்திய அரசாங்கத்தின் உயரிய பதவிகளுக்கான அதிகாரிகளை தேர்வு செய்யவும் யுபிஎஸ்சி உதவி செய்கிறது.
யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேர்வுகளைத் தவிர மற்ற தேர்வுகள் குறித்து தேர்வர்கள் பலரும் அறிந்திருப்பதில்லை. யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்.
யுபிஎஸ்சி என்றால் என்ன?
யுபிஎஸ்சி என்பது குடிமைப் பணி தேர்வுகளுக்கும், மத்திய அரசின் மற்ற பிற உயரிய பதவிகளுக்கும் தேர்வு நடத்தி அதிகாரிகளை உருவாக்குவதற்காக அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். குடிமைப் பணி தேர்வு யுபிஎஸ்சி-யால் நடத்தப்படும் மிக முக்கியமான தேர்வு. இந்தத் தேர்வின் வாயிலாக தேர்வர்கள் சமுதாயத்தில் மிகவும் மதிப்புமிக்க பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் குரூப் ஏ மற்றும் குரூப் பி பதவிகளுக்குத் தேர்வாகின்றனர். குடிமைப் பணி தேர்வுகளை தவிர்த்து இந்திய வனத்துறை சேவைகளுக்கானத் தேர்வு, இன்ஜினியரிங் சேவைகளுக்கானத் தேர்வு, பாதுகாப்பு துறைக்கான ஒருங்கிணைந்த தேர்வு, தேசிய பாதுகாப்பு அகாடெமிக்கானத் தேர்வு, கடற்படை சார்ந்த பணிகளுக்கானத் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கானத் தேர்வு போன்ற பல தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்துகிறது. இந்த தேர்வுகளின் மூலம் நிர்வாகம், பொறியியல், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளுக்கான உயர் அதிகாரிகளை யுபிஎஸ்சி தேர்வு செய்கிறது.
யுபிஎஸ்சி எப்போது தொடங்கப்பட்டது?
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அக்டோபர் 1, 1926 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. யுபிஎஸ்சி ஆரம்பத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் என அழைக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி அரசியலமைப்பு அந்தஸ்தைப் பெற்றது. யுபிஎஸ்சி-யின் முதன்மையானப் பணி குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை நடத்துவது. குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு மற்றும் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வினை யுபிஎஸ்சி ஆண்டு முழுவதும் நடத்துகிறது.
குடிமைப் பணிகளுக்கான தேர்வு ஆண்டுதோறும் தவறாமல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் மூன்று படிநிலைகள் உள்ளன. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு. இந்திய வனத்துறை சேவைக்கான தேர்வினை எழுதுபவர்களும் குடிமைப் பணி தேர்வின் முதல்நிலைத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதன்பின், வனத்துறை சேவைக்கான முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் தனியாக நடத்தப்படும்.
தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறது?
யுபிஎஸ்சி தேர்வுகள் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படுகிறது. எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் ஆளுமைத் தேர்வு எனப் பல கட்டங்களாக தேர்வரின் திறன் மதிப்பிடப்படுகிறது. பல கட்ட மதிப்பிடுதல் மூலமாக தேர்வரின் அறிவுத் திறன், குடிமைப் பணிக்கான தகுதியை அவர் பெற்றுள்ளாரா என்பன விரிவாக மதிப்பிடப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.