

யுபிஎஸ்சி நடத்தும் முக்கியமான தேர்வுகள்
குடிமைப் பணி தேர்வு
பதவிகள்: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் மற்றும் குரூப் ஏ மற்றும் குரூப் பி சேவைகள்.
குடிமைப் பணி தேர்வு மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு, வருவாய் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. குடிமைப் பணித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள் அரசின் கொள்களை வகுத்தல், அதனை செயல்படுத்துதல், பல்வேறு துறை சார்ந்த நிர்வாகத்தினை கவனித்துக் கொள்வது போன்ற மிக முக்கிய பொறுப்புகளில் ஈடுபடுகின்றனர்.
பொறியியல் சேவைகளுக்கான தேர்வுகள்
பதவிகள்: இந்திய பொறியியல் சேவைகள் (ஐஇஎஸ்) (சிவில் என்ஜினியரிங், மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் என்ஜினியரிங்)
பொறியியல் சேவைகளுக்கானத் தேர்வின் மூலம் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கான பொறியியல் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, பொதுத்துறை சார்ந்த பணிகள், போக்குவரத்து, ஆற்றல், தொலைத்தொடர்பு மற்றும் உற்பத்தி போன்ற அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றுகின்றனர்.
ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கான தேர்வு
பதவிகள்: அரசின் பல்வேறு சுகாதாரம் சார்ந்த துறைகளில் மருத்துவ அதிகாரிகள். ரயில்வே துறை, ஆயுதக் கிடங்குகள், நகராட்சி அலுவலகங்களில் சுகாதார அதிகாரிகள்.
ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கானத் தேர்வின் மூலம் பொது சுகாதாரம், நோய் வருமுன் காத்தல், குடும்ப நல சுகாதார முகாம்கள் மற்றும் மருத்துவ நிர்வாகம் போன்றவற்றுக்காக மருத்துவ வல்லுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்திய வனத்துறை சேவைகளுக்கான தேர்வு
பதவி: இந்திய வனத்துறை பாதுகாப்பு அதிகாரி. காடுகள் மேலாண்மை, காடுகளையும் காடுகளில் உள்ள வன விலங்குகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வது வனத்துறை பாதுகாப்பு அதிகாரியின் முக்கிய பொறுப்பாகும்.
வனத்துறை அதிகாரிகள் வனங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை, வனவிலங்குகளின் பாதுகாப்பு, கிராமப்புறங்களின் வளர்ச்சி, வனங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களை எதிர்கால சந்ததியினரின் தேவையறிந்து பொறுப்புடன் பயன்படுத்துவதை உறுதி செய்கின்றனர்.
ஒருங்கிணைந்த பாதுகாப்பு துறைக்கான தேர்வு
பதவி: இந்திய ராணுவம், இந்திய விமானப் படை மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள்.
ஒருங்கிணைந்த பாதுகாப்பு துறைக்கான தேர்வின் மூலம் ராணுவத்தின் பல்வேறு துறைகளுக்கான அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்கள் ராணுவம், மருத்துவம் மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்றனர்.
தேசிய பாதுகாப்பு அகாடெமிக்கான தேர்வு
பதவி: இந்திய ராணுவம், இந்திய விமானப் படை மற்றும் இந்திய கப்பற்படைக்கான வீரர்கள்.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ராணுவப் பயிற்சியினை தேசிய பாதுகாப்பு அகாடெமி வழங்குகிறது. ராணுவத் தலைமை, ராணுவ யுக்திகள், ராணுவப் பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு உடல்தகுதி என்பது மிக முக்கியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.