

யுபிஎஸ்சி தேர்வுக்கு ஏன் படிக்க வேண்டும்?
குடிமைப் பணி தேர்வுகளுக்கு சமுதாயத்தில் கிடைக்கும் மிகப் பெரிய மரியாதையை யாராலும் மறுக்க முடியாது. மத்திய அரசின் மிக உயர்ந்த பதவியை அடைவதற்காக தேர்வர்கள் பல ஆண்டுகளாக தங்களது கடும் உழைப்பை கொடுக்கின்றனர். இத்தனை கடினமான தேர்வு எனத் தெரிந்தும் தேர்வர்கள் குடிமைப் பணித் தேர்வினை நோக்கி இழுக்கப்படுவது ஏன்? எதற்காக லட்சக்கணக்கில் இந்த குடிமைப் பணித் தேர்வுக்காக ஆண்டுதோறும் விண்ணப்பிக்கிறார்கள்?
யுபிஎஸ்சி தேர்வை நோக்கி தேர்வர்கள் கவரப்படுவதற்கான காரணிகள்
தேர்வர்கள் பணியமர்த்தப்படுவதில் எந்தவொரு குழறுபடியும் இல்லாதது
குடிமைப் பணித் தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் நிலவும் கடும் போட்டி
உயர்ந்த நிலையை அடைய வாழ்க்கைக்கானப் பாதையாக யுபிஎஸ்சி தேர்வுகள் பார்க்கப்படுவது
சமுதாயத்தில் கிடைக்கும் மரியாதை மற்றும் பணியில் அமர்ந்த பிறகு அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்
கொள்கைகளை வகுப்பதிலும், தேசத்தைக் கட்டமைப்பதிலும் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு
உயர்ந்த பதவியை அடைய பலதரப்பட்ட வாய்ப்புகள்
உத்தரவாதமான வேலை
வேலையையும், குடும்பத்தையும் சமமாக கொண்டு செல்வதற்கான வாய்ப்பு
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய பதவி
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்யும்போது இந்தியன் சிவில் சர்வீஸ் (ஐசிஎஸ்) தேர்வினை உருவாக்கினார்கள். அதன்பின், ஆங்கிலேய அரசின் மிக முக்கிய பொறுப்பாக அந்தப் பதவி மாறிப்போனது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட, இந்திய குடிமைப் பணி பதவி தொடர்ந்தது. சிவில் சர்வீஸ் என்பது தற்போதும் நாட்டை கட்டமைப்பது, ஆட்சி செய்வது ஆகியவற்றில் மிக உயரிய பதவியாக உள்ளது. இந்த காரணங்களினால் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மிக முக்கிய நபர்களாக (விஐபிக்களாக) நடத்தப்படுகின்றனர். சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கும் இந்த அதிகப்படியான மரியாதை சரியா? தவறா? என்ற விவாதமும் வெகு நாள்களாக வலம் வந்து கொண்டே இருக்கின்றன.
இந்தியாவின் முதல் குடிமைப் பணி அதிகாரி (சத்யேந்திரநாத் தாகூர்)
இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வுகள் அன்றைய காலக் கட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமான உயரிய பதவியாக இருந்தது. அதிலும் குறிப்பாக உயர் வகுப்பைச் சேர்ந்த ஆங்கிலேய அதிகாரிகளால் மட்டுமே சிவில் சர்வீஸ் பதவிகளுக்கு வர முடிந்தது. 1864 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியரான சத்யேந்திரநாத் தாகூர், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இந்தியாவின் முதல் சிவில் சர்வீஸ் அதிகாரியாக மாறினார். பிரபலமாக அறியப்பட்ட தாகூர் குடும்பத்தைச் சேர்ந்தவர் சத்யேந்திரநாத் தாகூர். 1842 ஆம் ஆண்டு பிறந்த இவர், கல்கத்தாவில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரியில் கல்வி கற்றார். அவரது கல்லூரி நாட்களில் பிரம்ம சமாஜத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். இங்கிலாந்தில் சிவில் சர்வீஸ் பயிற்சியின்போதும் பிரம்ம சமாஜத்தின் கொள்கைகளை தீவிரமாக பரப்பினார். இந்தியாவுக்கு வந்த பிறகு பம்பாய் மாகாணத்தில் உதவி மாஜிஸ்ட்ரேட்டாக தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர், அகமதாபாதின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அதன்பின் 30 ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார்.
சிவில் சர்வீஸின் தந்தை (காரன்வாலிஸ்)
சார்லஸ் காரன்வாலிஸ் (டிசம்பர் 31, 1738 - அக்டோபர் 5, 1805) ஒரு ஆங்கிலேய ராணுவத் தளபதி. இந்தியாவில் அவருடைய பதவிக்காலத்தில் (1786 - 1793) மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்தங்களின் காரணமாக காரன்வாலிஸ் இந்திய சிவில் சர்வீஸின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவரது முயற்சிகள் இந்தியாவில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நவீனமயமாக காரணமாக அமைந்தது. காரன்வாலிஸ் இந்தியாவில் வருவாய் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகள் உருவாவதற்கான பணியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். அவரது சீரிய முயற்சியால் இந்தியன் சிவில் சர்வீஸ் (ஐசிஎஸ்) உருவானது. இந்தியன் சிவில் சர்வீஸ் தற்போது இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) என அழைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.