என்ன? ஏன்? எவ்வாறு? எப்போது? கடினமான யு.பி.எஸ்.சி. தேர்வின் வரலாறு! - 4

யு.பி.எஸ்.சி. தேர்வின் வரலாறு குறித்து விரிவாக அறிந்துகொள்ள...
என்ன? ஏன்? எவ்வாறு? எப்போது? கடினமான யு.பி.எஸ்.சி. தேர்வின் வரலாறு! - 4
Updated on
3 min read

சிவில் சர்வீஸஸ் மற்றும் யுபிஎஸ்சி உருவான வரலாறு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) என அறியப்படும் இந்த அமைப்பானது, இந்தியாவில் மிக முக்கியமாக மதிக்கப்படும் அமைப்புகளில் ஒன்றாகும். இந்தியாவுக்கான ஆட்சியாளர்களைத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து இந்தியாவை வலிமையாக கட்டமைப்பதில் இந்த அமைப்பு மிக முக்கிய பங்காற்றுகிறது. அனைத்திந்திய சேவைகளுக்கான அதிகாரிகள், மத்திய அரசுப் பணிக்கான அதிகாரிகள் மற்றும் குரூப் ஏ மற்றும் குரூப் பி சேவைகளுக்கான அதிகாரிகளை யுபிஎஸ்சி கடுமையான தேர்வுகள் மூலம் தேர்வு செய்கிறது. இந்தியாவுக்கான அதிகாரிகளை உருவாக்குவதில் யுபிஎஸ்சி மிக முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், யுபிஎஸ்சி எப்படி உருவானது? எப்போது இந்த அமைப்பு இத்தகைய மதிப்பு மிக்க நிலையை அடைந்தது? இந்தியாவில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் உருவானதற்கான வரலாறு என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்.

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி

1854 ஆம் ஆண்டுக்கு முன்பு: கிழக்கிந்திய கம்பெனிக்கான சிவில் சர்வீஸ் அதிகாரிகள் அந்த கம்பெனியின் நிர்வாக இயக்குநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு லண்டனில் உள்ள ஹேலிபரி கல்லூரியில் பயிற்சியளிக்கப்பட்டது.

1854: பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் தேடுதல் குழுவிடம் லார்டு மெக்காலே சிவில் சர்வீஸ் அதிகாரிகளை மெரிட் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான அறிக்கையை அறிமுகம் செய்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் லண்டனில் சிவில் சர்வீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.

1855: முதல் முறையாக போட்டித் தேர்வுகளை சிவில் சர்வீஸ் கமிஷன் லண்டனில் நடத்தியது. இந்தத் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 23 எனவும், குறைந்தபட்ச வயது வரம்பு 18 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் இந்தியர்கள் யாரும் தேர்ச்சி பெற முடியாத வகையில் ஐரோப்பிய கலாசாரங்கள் குறித்ததாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சி

1861: லார்டு கேனிங் 1861 ஆம் ஆண்டு இந்திய சிவில் சர்வீஸ் சட்டத்தை இயற்றினார். இந்திய சிவில் சர்வீஸ் சட்டம், 1861 இந்திய குடிமகனாக 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளவர்களை சிவில் சர்வீஸின் சில பதவிகளுக்கு தகுதியானவர்களாக்கியது.

1864: சத்யேந்திரநாத் தாகூர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியராக மாறினார்.

1866: சிவில் சர்வீஸஸ், இம்பீரியல் சிவில் சர்வீஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், இந்தியன் சிவில் சர்வீஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1870: இந்திய சிவில் சர்வீஸ் சட்டம், 1870 இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, தகுதி மற்றும் மெரிட் அடிப்படையில் சிவில் சர்வீஸ் அதிகாரியாக இந்தியர்கள் பதவி வகிக்கலாம். இந்த சட்டத்திற்கு இந்திய சிவில் சர்வீஸ் சட்டம், 1861 தடையாக இருக்காது.

1886: இந்திய சிவில் சர்வீஸில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக வைசிராய் லார்டு டஃப்ரின், அய்ட்சிசன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு ஒப்பந்தம் மற்றும் ஒப்பந்தமற்ற சிவில் சர்வீஸுக்குப் பதிலாக இம்பீரியல், மாகாணங்கள் மற்றும் துணை சிவில் சர்வீஸ் என மாற்றம் செய்ய பரிந்துரைத்தது. உள்ளூர் சிவில் சர்வீஸ் பணியிடங்களில் அதிக அளவில் இந்தியர்கள் இடம்பெற வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

1912: இந்தியன் சிவில் சர்வீஸில் 25 சதவிகித உயர் பதவிகள் இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இஸ்லிங்டன் குழு பரிந்துரைத்தது. அதேபோல சிவில் சர்வீஸ் அதிகாரிகளை பணியமர்த்தும் நடைமுறை லண்டனிலும், இந்தியாவிலும் கடைபிடிக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கியது.

1917: இந்தியர்களின் பங்களிப்பு அரசின் அனைத்து துறைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட வேண்டுமென லார்டு மாண்டேகு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஆலோசனையை முன்வைத்தார்.

1918: பிடிட்டிஷ் சிவில் சர்வீஸுக்கு 33 சதவிகித இந்தியர்களை பணியமர்த்துவதற்கு லார்டு மாண்டேகு மற்றும் லார்டு செம்ஸ்ஃபோர்டு ஆதரவு தெரிவித்தனர். இந்த சதவிகிதம் ஆண்டுதோறும் 1.5 சதவிகிதம் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

1919: மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது. மேலும், இம்பீரியல் சர்வீஸ் என்பது அனைத்திந்திய சேவைகள் (ஆல் இந்தியா சர்வீஸஸ்) என மாற்றம் செய்யப்பட்டது.

1922: இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகள் இங்கிலாந்தில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் நடைபெறத் தொடங்கியது. மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக ஃபெடரல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.

1923: இந்திய சிவில் சர்வீஸ் பணிகளில் இந்தியர்கள் இடம்பெறுவதை மேலும் உறுதி செய்ய, சிவில் சர்வீஸ் தேர்வுகளில் 40 சதவிகிதம் பிரிட்டிஷ்காரர்களும், 40 சதவிகிதம் இந்தியர்களும், மாகாணங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து 20 சதவிகிதம் இந்திய சிவில் சர்வீஸ்களில் ஈடுபட லீ கமிஷன் பரிந்துரை செய்தது.

1926: இந்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது. சர் ரோஸ் பார்க்கர் அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1935: இந்திய அரசாங்க சட்டம், 1935-ன் படி அனைத்திந்தியப் பணிகளுக்கு கீழ் இந்தியன் சிவில் சர்வீஸ், இந்தியன் போலீஸ் சர்வீஸ் மற்றும் இந்தியன் மெடிக்கல் சர்வீஸ் மட்டுமே இடம்பெற்றது. மற்ற சேவைகள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கின. இந்த சட்டம் ஃபெடரல் பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கியது.

சுதந்திரத்துக்குப் பிறகு

1950: அரசியலைப்பு விதி 378 பிரிவு 1-ன் படி ஃபெடரல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1951: சிவில் சர்வீஸ் பணியமர்த்தலை ஒழுங்குபடுத்தவும், அதற்கான வரையறைகளை உருவாக்கவும் அனைத்திந்திய சேவைகள் சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுவானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

1966: அனைத்திந்திய சேவைகள் சட்டத்தின் கீழ் இந்திய வனத்துறை சேவை (ஐஎஃப்எஸ்) உருவாக்கப்பட்டது.

1976: கோத்தாரிக் குழு சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மூன்று கட்டங்களை பரிந்துரைத்தது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று கட்டத் தேர்வுகள் பரிந்துரைக்கப்பட்டது.

1989: எழுத்துத் தேர்வுகளில் (முதன்மைத் தேர்வு) கட்டுரை எழுதும் பகுதி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என சதீஷ் சந்திரா தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. மேலும், நேர்காணலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

2004: முதல்நிலைத் தேர்வில் திறனறித் தேர்வு (ஆப்டிடியூடு தேர்வு) அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென ஹோட்டா குழு பரிந்துரைத்தது.

2013: இந்திய வனத்துறை சேவைக்கான தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வு போன்றே வடிவமைக்கப்பட்டது.

Summary

To learn more about the history of the UPSC examination...

என்ன? ஏன்? எவ்வாறு? எப்போது? கடினமான யு.பி.எஸ்.சி. தேர்வின் வரலாறு! - 4
என்ன? ஏன்? எவ்வாறு? எப்போது? கடினமான யு.பி.எஸ்.சி. தேர்வின் வரலாறு! - 3

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com