தொன்றுதொட்டுக் காதலின் இலக்கணம்

சுற்றும் உலகில் சுற்றமோடு சுற்றித் திரியும் மனித வாழ்கை மற்றும் உலக உயிர்கள் அனைத்திலும் காந்தம் போல் ஒட்டிக் கொண்டிருப்பது காதல் மட்டுமே.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சுற்றும் உலகில் சுற்றமோடு சுற்றித் திரியும் மனித வாழ்கை மற்றும் உலக உயிர்கள் அனைத்திலும் காந்தம் போல் ஒட்டிக் கொண்டிருப்பது காதல் மட்டுமே.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து காதல் என்ற ஒற்றை சொல்லிலே மனிதனின் வாழ்க்கை மாறியது. அரசன் முதல் ஆண்டி வரை காதல் எனும் கடலில் மூழ்கி முத்து எடுத்தவர்களும் உண்டு, காதல் கடலில் காணாமல் போனவர்களும் உண்டு.

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில்
முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி"

தமிழ் குடி மட்டும் தோன்றவில்லை, தமிழோடு சேர்ந்து காதலும் தோன்றி விட்டது. உலகில் எல்லா இலக்கியத்திலும் காதலின் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழில் மட்டும் காதலிற்கு இலக்கணம் வகுத்து காதலின் வலிமை, காதலின் அம்சம், காதலின் நிலைகள், ஒருதலைக் காதல் என காதலின் உள்பிரிவுகளைப் பற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்க இலக்கியப் பாடல்கள் உள்ளன. 

முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் காதலினை மூன்று பகுதிகளாக வகுத்துள்ளார்.

(1) கைக்கிளை-  என்பது  ஒரு  தலைக்காமம்.  (கை – பக்கம், கிளை – உறவு).  இதை ஒவ்வாக் காமம் என்றும் கூறுவர். கைக்கிளை புணராத காதல் ஆகும். கைக்கிளைக்கு  நிலம் ஒன்றும்  ஒதுக்கப்படவில்லை. ஏனெனில் இது மலராக் காதல், எங்கும் காணப்படலாம்.

(2) அன்பின் ஐந்திணை- இதை அன்புடைக் காதல் என்றும் கூறுவர். அன்பின் ஐந்திணை என்பது ஐந்திணைகளான குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை ஆகிய ஐவகை நிலங்களுக்கேற்ப சூழல், தொழில், சுற்றம் மற்றும் இயற்கையையொட்டி புணரும் காதல் ஆகும்.

குறிஞ்சியில் புணர்தலும், முல்லையில் இருத்தலும், பாலையில் பிரிதலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும் ஆகியன - இயற்கையோடு ஒட்டி நிகழ்வது அன்பின் ஐந்திணை காதல் எனப்படும்.

(3) பெருந்திணை- என்பது ஒருவனும் ஒருத்தியும் ஒருவருக்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் முறையாகும். இதைப் பொருந்தாக் காமம் என்றும் கூறுவர். பெருந்திணை புணர்ந்த பின்னான நிகழ்ச்சியாகும். பெருந்திணைக்கும் நிலம் ஒன்றும் ஒதுக்கப்படவில்லை.

(1) ஆண்மகனுக்கே உரிய மடலேறல், (2) இளமை நீங்கிய முதுமைக் காலத்திலும் தம்முள் கூடி இன்பம் துய்த்தல், (3) தெளிவற்ற நிலையில் காமத்தின் கண் மிகுதிப்பட்டு நிற்றல், (4) ஐந்திணையான ஒத்த காமத்தில் மாறுபட்டு நிற்றல் ஆகிய நான்கும் பெருந்திணை எனத் தொல்காப்பியம் கூறும். இயற்கை சார்ந்த சமூகத்தை உள்ளடக்கிய இவ்வுலகில் உயிரினங்களின் செயல்கள் யாவும் ஒன்றோடொன்று இணைந்தது இருப்பது இயற்கை ஆனது.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்”

                                                      (தொல்.1164)
மனித குலத்தின் இயற்கை இயல்பான இன்ப நுகர்வாம் காதல்; அது அனைத்துக்குமான பிணைப்பு நிலை: அது இயற்கையோடு பொருந்திய ஒழுக்க நிலை; அவற்றை மானுட உடலுயிரினின்று பிரித்து அறிய முடியாது! அத்தகு காதலைப் பழந்தமிழகம் போற்றிற்று;

"யான் நோக்கும்காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்"

                                                  (குறள்:1094 )

ஒரு ஆண்மகன் பெண்ணைப் பார்க்கின்றபோது, பெண்ணோ நிலத்தினைப் பார்ப்பாள். ஆண் அவளை பார்க்காதபோது அவனைப் பார்த்து புன்னகைத்து மகிழ்வாள் என்கிறார் திருவள்ளுவர்.  

தலைவனுக்கும், தலைவிக்கும் எதிர்பாராத சந்திப்பினால் காதல் மலர்ந்து இப்படி முன்பின் தெரியாத இளைஞனுடன் ஏற்பட்ட காதலை மற்றும் தலைவன் நம்மை விட்டுச் சென்று விடுவானோ என்ற ஐயத்தில் இருக்கும் தலைவியின் முகத்தில் இருக்கும் கவலையை அறிந்த தலைவன், உடனே செம்மண் நிலத்தில் பெய்த மழைநீரைப் பார்த்து இவ்வாறு உரைக்கின்றான் என்பதை செம்புலப்பெயல்நீரார் குறுந்தொகையில்,

“யாயும் யாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”

                                                                 (குறுந்தொகை. 40)
 
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? நானும் நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போலஅன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே என்று தலைவன் தலைவியிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.

ஒரு பெண்ணுக்கு காதல் வந்துவிட்டால் முதலில் கெடுவதென்ன தூக்கம்தான் அப்படி நெய்தல் நிலப்பெண் காதல் வயப்பட்டு தூக்கம் தொலைத்து நின்ற உணர்வை பதுமனார் என்ற புலவர் எடுத்துரைக்கிறார்.

“நள்ளென்றன்றே, யாமம் சொல் அவித்து,
இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மற்ற துஞ்சாதேனே”

                                      (குறுந்தொகை : 6)

இருள் சூழ்ந்த நள்ளிரவுப் பொழுதில், மக்களின் பேச்சு ஒலி குறைந்து அடங்கி, இனிமையாக உறங்குகின்றனர். அகன்ற உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வெறுப்பு எதுவும் இன்றி உறங்குகின்றது; ஆனால், நான் ஒருத்தி மட்டும் உறங்காமல் தவித்தபடி இருக்கின்றேன். தலைவனுக்காக தனிமையில் இருக்கும் பெண்ணின் ஏக்கத்தை இப்பாடலின் மூலம் அறியப்படுகிறது.
மெய்யான காதல் வாழ்வு வாழும் கணவனும், மனைவியும் எவ்வாறு விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்று மான்களை உவமையாக வைத்து ஐந்திணை ஐம்பதில் மாறன் பொறையனார் நமக்கு உணர்த்துகிறார்.

"சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப்
பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல
ருள்ளம் படர்ந்த நெறி"

                                            ( ஐந்திணை ஐம்பது:38)

பாலை நிலத்தில் காதல் மிகுந்த ஆண் மானும், பெண் மானும் ஓடிக் களைத்து தாகம் தீர்க்க நீர்வேண்டி, அங்குமிங்கும் அலைகின்றன. ஒரு சுனையில் ஒரு மான் அருந்துவதற்கு மட்டுமே சிறிதளவு நீர் உள்ளது. இந்நிலையில், பெண்மான் நீர் அருந்தட்டும் என்ற உயரிய நோக்கோடு ஆண்மான், தான் நீரைப் பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண் மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. சுனையின் நீர் தீரவே இல்லை. தங்கள் காதலினை அந்த இரு மான்களும் வெளிப்படுத்திய விதத்தை நமக்கு இவ்வாறு உணர்த்துகிறது ஐந்திணை ஐம்பது.

இதன் மூலம் காதல் வாழ்விலும், இல்லற வாழ்விலும் கணவனும் மனைவியும் எவ்வாறு தாமாக விட்டுக் கொடுத்து காதலுடன் வாழவேண்டும் என்று மனிதனுக்கு அஃறிணை உயிர்கள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்கால உலகில் தமிழ் போற்றும் தொன்மைக் காதல் தொலைந்து போனாலும் நவீன கால காதலர்கள் மீது விமர்சனங்கள் இருந்தாலும், உண்மையான காதலை யாரும் வெறுப்பதில்லை. திருமணமானவர்கள் தங்கள் மனைவி அல்லது கணவரைக் காதலித்தால்தான் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கும்.

எனவே, பாரதியார் சொல்லின்படி,

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com