கரோனாவை வென்ற காதல் கதைகள்!

​கரோனா உயிர்களைக் கொல்கிறது என்கிற எதிர்மறையான கோணங்கள் இருந்தாலும் அது பல்வேறு காதல் கதைகளை எழுதி இயக்கி உயிர்ப்பித்துள்ளது.
கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் தாமஸ் மற்றும் மரியம்மா
கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் தாமஸ் மற்றும் மரியம்மா


கரோனா உயிர்களைக் கொல்கிறது என்கிற எதிர்மறையான கோணங்கள் இருந்தாலும் அது பல்வேறு காதல் கதைகளை எழுதி இயக்கி உயிர்ப்பித்துள்ளது.

மதம், இனம் என வேறுபாடுகளின்றி அனைவருக்குள்ளும் ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பை உண்டாக்கி ஒரு வருடத்தையே முற்றிலுமாக முடக்கிப்போட்டது கரோனா. சிலருக்கு பொருளாதாரப் பிரச்னை, சிலருக்கு வாழ்வாதாரப் பிரச்னை, சிலருக்கு உளவியல் ரீதியான பிரச்னை என அனைவரையும் கரோனா புரட்டிப்போட்டது.

இதுவரை கண்டிராத வகையில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வந்தாலும், அனைவரும் தொடர்ந்து இயங்குவதற்கும், அதிலிருந்து வெளிவருவதற்கும் உந்துதலாக இருந்தது/இருப்பது காதல் ஒன்றுதான். 

அந்த வகையில் சில கதைகளில் கரோனாவை வெல்வதற்கு காதலும் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

கரோனாவை வென்ற காதல் ஜோடி:

பிரிட்டனைச் சேர்ந்த காதல் ஜோடி எலிசபெத் கெர் மற்றும் சைமன் ஓ பிரையன். இருவரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஜனவரி 9-இல் இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மில்டன் கெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஒரே ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இருவரது உடல்நிலையும் மோசமடையத் தொடங்கியது. கெர் ஒரு செவிலியர் என்பதால் சூழலை உணர்ந்து இந்த சந்தர்ப்பத்தைவிட்டால் இருவரும் பிற்காலத்தில் திருமணம் செய்துகொள்ள முடியாது என எண்ணினார்.

இதனால், தங்களுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு அங்கிருந்த மருத்துவ ஊழியர்களை கெர் கேட்டுக்கொண்டார். சைமனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். 

ஆனால், இந்தச் சூழலால் கூட அவர்களது திருமணத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. திருமணத்துக்காக சைமனுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது மருத்துவர்களால் தாமதப்படுத்தப்பட்டது. அந்த இடைவெளியில்தான் கெர் மற்றும் சைமனின் திருமணம் மருத்துவமனையில் வைத்தே ஜனவரி 12-இல் நடைபெற்றது.

'சுவாசத்திற்காகப் போராடிக்கொண்டிருந்த அந்த மோசமான அனுபவம்தான் 'எது முக்கியம்' என்பதை தெளிவுபடுத்தியது. நாம் யாரை விரும்புகிறோமோ அதுதான் முக்கியம். அதுதான் நமது உலகமே.
 
ஒருவேளை, திருமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்பை எங்களுக்கு வழங்காமல் இருந்திருந்தால் நாங்கள் இந்த இடத்தில் இப்போது இருந்திருப்போமா எனத் தெரியவில்லை.'
 

திருமணம் முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து கரோனா வார்டுக்குத் திரும்பிய பிறகு சைமனை அருகில் வைத்து கெர் கூறியது இது. 

ஸ்பெயின் ஜோடி:

ரோசரியோ (62), பெர்னான்டோ (70) இருவரும் ஜனவரி 23-ம் தேதி கரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

13 வருடங்களாக ஒன்றாக இருந்தபோதிலும் பெர்னான்டோ திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு மருத்துவமனையில் படுக்கையிலிருந்த போதுதான் இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை என்பதை பெர்னான்டோ உணர்ந்தார். உடனடியாக, வாட்ஸ் ஆப்பில் ரோசரியோவுக்கு திருமணம் செய்துகொள்வது குறித்து செய்தி அனுப்பினார் பெர்னான்டோ.

ரோசாரியோவுக்கோ இது வாழ்நாள் கனவாக இருந்ததையடுத்து, திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.
 
இதையடுத்து, செவிலியர்கள் உதவியுடன் மருத்துவமனையிலிருந்தபடியே இருவரது திருமணம் நடைபெற்றது. ரோசாரியோ சக்கர நாற்காலியில் இருந்தபடியும், பெர்னான்டோ படுக்கையிலிருந்தபடியும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

இவர்களது திருமண விடியோவை மாட்ரிட் அரசே வெளியிட்டது.

இந்தியாவில் கரோனாவை வென்ற மூத்த கேரள ஜோடி:

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த வயது மூத்த ஜோடி தாமஸ் (93) மற்றும் மரியம்மா (88). இத்தாலியிலிருந்து கடந்தாண்டு பிப்ரவரி மாதம் விடுமுறைக்காக திரும்பிய இவர்கள் மகன் மற்றும் குடும்பத்தினர் மூலம் இருவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டது. 

இதையடுத்து, இருவரும் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவருக்கும் நீரிழிவு நோய், இதய நோய் பிரச்னை என வயது மூப்பு பிரச்னைகள் இருந்ததால் சிகிச்சையளிப்பது மருத்துவர்களுக்கு கடும் சவாலாக இருந்தது.

தாமஸின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டார். இதனிடையே தாமஸுக்கு மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. 

மரியம்மாவும் கரோனா வார்டில் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளை எண்ணி இரவு நேரத்தில் அழுது வந்திருக்கிறார். அவரை சமாதானப்படுத்தி உறங்க வைப்பது மருத்துவர்களுக்குப் பெரிய சிக்கலாக இருந்தது.

திருமணம் ஆனதிலிருந்து இருவரும் பிரிந்ததே இல்லை. ஒருவரையொருவர் பார்க்காமல் இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று தாமஸ் கூறினார்.

மருத்துவமனையில் இந்த யதார்த்தத்தை உணர்ந்த மருத்துவர்கள் கரோனா வார்டுகளில் பிரிந்திருந்த இருவரையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்படி படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்தனர். உளவியல் ரீதியாக இது சிகிச்சைக்குப் பலனளிக்கும் என்று மருத்துவர்கள் நம்பினர்.

விளைவு, எதிர்பார்த்தபடி இருவரும் கரோனாவை வென்று வீடு திரும்பினர்.  

கரோனா எத்தனை எத்தனையோ பிரச்னைகளை ஏற்படுத்தியிருந்தாலும், உலகின் வேகத்தோடு வேகமாக ஏதேனும் ஒரு தேடலை நோக்கி சுழன்று கொண்டிருந்த மனிதர்களை ஒரு நிமிடம் காத்திருங்கள் என நிறுத்தி வைத்தது. கரோனாவால் ஏற்பட்ட இந்த இடைவெளியும் சூழலும்தான் பலரது மனதில் வாழ்வின் யதார்தத்தை உணர வைத்தது.

சுவாசத்திற்காக போராடிக் கொண்டிருந்தபோது எலிசபெத் கெர் தனக்கு எது முக்கியம் என்பதை  உணர்ந்ததைப்போல், பலர் தங்களுக்கான தேவை என்ன என்பதை இந்தப் பொது முடக்க காலத்தில் உணர்ந்துள்ளனர்.

லட்சங்களையும், கோடிகளையும் தேடி ஓடியபோதுகூட தீராத தேடலின் தாகம், நாமிருக்கும் இடத்திலேயே நம்மைச் சுற்றி உள்ளவர்களிடத்திலேயே வெறும் சில ஆயிரங்களிலும் சில நூறுகளிலும் பூர்த்தியடைவதை கரோனா காலமும், பொது முடக்க காலமும் உணர வைத்துள்ளது. 

கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் வேறு ஒரு தளத்தில் இருந்த ஏராளமானோரின் வாழ்கை, கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், மனம் தளராது தொடர்ந்து எழுச்சி பெற உந்துதலாக இருப்பது அவரவர் பின்னணியிலுள்ள மனிதர்களும், அவர்களுக்கிடையே இருக்கும் அன்பும் காதலும்தான். இதற்கு  மேற்குறிப்பிட்ட கதைகள் வெளிச்சத்துக்கு வந்த உதாரணங்கள் மட்டுமே. வெளிச்சத்துக்கு வராது உலகம் முழுக்க ஒவ்வொரு வர்கத்திலும் கோடிக்கணக்கான காதல் கதைகள் உள்ளன.

மேற்கண்ட கதைகளைச் சான்றுகளாகக் கொண்டு, மனித குலம் தொடர்ந்து இயங்க எண்ணற்ற காதல் கதைகளை தொடர்ந்து உருவாக்குவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com