சிறு நகரங்களுக்கும் பரவிவிட்ட காதலர் தின கொண்டாட்டம்

பெரு நகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சி அளவிலேயே கொண்டாடப்பட்டு வந்த காதலர் தினம் தற்போது பேரூராட்சி போன்ற சிறு நகரங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது.
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காதலர் தின பரிசுப் பொருள்கள்
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காதலர் தின பரிசுப் பொருள்கள்

பெரு நகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சி அளவில் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த வந்த காதலர் தினம், தற்போது பேரூராட்சி போன்ற சிறு நகரங்களிலும் பரவத் தொடங்கியிருப்பது மூத்த தலைமுறையிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிராமம், நகரம் பாகுபாடின்றிக் காதலர் தினம் என்ற பெயரைக் கேட்டாலே இளைஞர்கள், இளம்பெண்கள் மனதில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு ஏற்படும். அன்றைய தினம் காதலர்கள், கடற்கரை, பூங்கா போன்ற இடங்களில் கூடி தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருதலைக் காதலர்களோ ஏதாவது பரிசுப் பொருளை வாங்கிவைத்துத் தன் காதலன் அல்லது காதலி எப்போது வருவார் என காத்திருந்து காதலைச் சொல்வதும் அதனை எதிர்த்தரப்பு ஏற்றுக்கொள்ளுமா அல்லது நிராகரிக்குமா என்பதும் முதல் நாளிலிருந்தே பதற்றம் ஏற்படுத்தக் கூடிய செயலாக இருந்து வருகிறது.

எனினும் அதிக பொருள் செலவில் பரிசுப் பொருள்கள் வழங்குவது என்பது நகர அளவிலேயே அதிக அளவில் இருந்து வருகிறது. சாதாரண வாழ்த்து அட்டை தொடங்கி ஆடை ஆபரணங்கள் வரை பரிசுப் பொருள்களால் எதிர் பாலினத்தவரைக் காதலர்கள் கவர்ந்து வருகின்றனர். இதற்கென மக்கள் அதிகம் கூடும் பேரங்காடி வளாகங்கள் - ஷாப்பிங் மால்கள் முதல் சிறிய அளவிலான கடைகள் வரை சிறப்புக் கண்காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். இவற்றிலிருந்து தங்களுக்கப் பிடித்தமானவருக்குப் பிடித்ததை தேர்வு செய்யும் காதலர்கள் இதில் பட்ஜெட் பார்ப்பதில்லை.

ஒருகாலத்தில் தாலுகா தலைமையகங்கள் போன்ற சிறிய நகரங்களில் இதுபோன்ற விற்பனையகங்கள் மிக அரிது. ஆனால், இப்போது சின்னச்சின்ன ஊர்களிலும் காதலர்களை இலக்காகக் கொண்டு கடைகள் விரிக்கப்படுகின்றன.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பரிசுப்பொருள் விற்பனையகம் வைத்து நடத்தி வரும் அஷோக் என்ற இளைஞர், கடந்த சில ஆண்டுகளாகப் பொங்கல் திருவிழா காலத்துக்குப் பின்னர் தனது கடையைக் காதலர் தினப் பரிசுப் பொருள்கள் விற்கும் விற்பனையகமாக மாற்றியுள்ளார். அதில் ரூ.10 மதிப்பிலான கீ செயின் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலான காம்போ பேக் பரிசுப் பொருள்கள் வரை பல வகைகளில் விற்பனைக்கு உள்ளது.

சாதாரண பேரூராட்சியான இங்கு அந்த அளவுக்கு வணிகம் உள்ளதா என்ற கேள்விக்கு அஷோக், 'சில ஆண்டுகளுக்கு முன்பு காதலர் தின பரிசுப் பொருள்கள் விற்பனையைத் தொடங்கும் முன் பலமாக யோசித்தேன். எனினும் துணிந்து ஆரம்பித்ததன் விளைவு காதலர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.  கீ செயின், பொக்கே, பொம்மைகள், வாழ்த்து அட்டைகள், தலையணை, அலங்காரப் பொருள்கள் என ஏராளமாக தில்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து வாங்கிக் குவித்துள்ளோம். அண்மைக் காலமாக காதலர் தினம் ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரோஜா தினம், காதலை வெளிப்படுத்தும் தினம், சாக்லெட் தினம், டெடிபேர் தினம், காதல் உறுதி மொழி தினம், கட்டிப் பிடித்தல் தினம், முத்தங்கள் தினம் இதையெல்லாம் கொண்டாடி முடித்த பின்னர்தான் ஒரு முழுமையான காதலர் தினம் கொண்டாட முடிகிறது.  எனினும், இப்பகுதி மக்கள் எல்லை மீறுவதில்லை.

காதலர்களைப் போல கணவன் தனது மனைவிக்கும், மனைவி தனது கணவனுக்கும் காதலர் தின பரிசுகள் அளிக்கும் கலாசாரமும் பெருகி வருகிறது. சாதாரண டீக்கடையில் நாள் ஒன்றிற்கு ரூ. 350 சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஒருவர், தனது மனைவிக்கு ரூ. 2 ஆயிரத்திற்கு பரிசுப் பொருள் வாங்கியுள்ளார். கரோனா காலத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் திறக்கப்படாமல் இருந்ததால் புதிய காதலர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உருவாகியுள்ளனர். இதனால் வியாபாரம் சற்று சுணக்கமாகவே உள்ளது. எனினும் கடைசி இரு தினங்களுக்கு அதிக ஆர்டர்கள் வந்துள்ளன என்றார்.

அந்த வகையில் ஆலங்குளம் சிறிய நகரமாக இருந்தாலும் காதலர் தினக் கொண்டாட்டம் நகரங்களுக்கு இணையாகக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சிதான்.

இதனிடையே பல ஆண்டுகளாக மலர் என்பவரைக் காதலித்து வந்த ஆலங்குளத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர், நிகழாண்டு காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அன்றைய தினம் முகூர்த்த நாள் அல்ல என்றாலும், பெற்றோர்கள், பெரியவர்கள் மறுத்தும்  காதலர் தினத்தில் தான் எங்கள் இல்வாழ்க்கை தொடங்க வேண்டும் என்கிறார் இந்த சுபாஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com