திருச்சியில் காதல் ஜோடிகளின் புகலிடம்

மலைக்கோட்டை உச்சியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு கீழே, உள்ள திறந்த வெளியில் ஜோடியாக அமர்ந்து, மாநகரின் அழகை ரசித்தபடியே தங்களது காதலையும் வளர்த்துக் கொள்வது வாடிக்கையாக உள்ளது.
திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

‘காதலினால் மானுடருக்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம், கவலை தீரும். ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே’ என்றார் முண்டாசுக் கவிஞர் பாரதி.

கண்டங்கள் கடந்து வியக்கும் இந்த காதலுக்கு அடையாளமான காதலர் தினக் கொண்டாட்டத்துக்கு திருச்சியும் தயாராகி வருகிறது. காதலர் தினத்தில் மட்டுமல்லாது எல்லா நாள்களிலும் காதலர்களுக்கு புகழ் சேர்க்கும் இடங்களாகவும், புகலிடங்களாகவும் மலைக்கோட்டை மாநகரில் பல்வேறு இடங்கள் உள்ளன.

காதலர் தின வரலாற்று கதை:

காதலர் தினம் கொண்டாடுவதற்கு பல்வேறு கதைகள் காரணங்களாக கூறப்பட்டாலும் பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக இருப்பது இந்த கதை மட்டுமே. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்துகொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம்.

திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் மதபோதகர் வேலண்டைன். அரசக் கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். வேலண்டைன் உயிரிழந்த நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. இதேபோல, பல வரலாற்று கதைகள் கூறப்படுகின்றன. ஆனால், வேலண்டைன் நினைவாக இந்த தினம் கொண்டாடப்படுவதை யாரும் மறுப்பதற்கில்லை.

வாழ்த்து அட்டை: உலகின் காதல் நகரம் என்ற சிறப்பைப் பெற்றது பிரான்ஸ். இந்த நாட்டில்தான் முதன் முதலில் காதலர் தின வாழ்த்து அட்டை வெளியானதாகக் கருதப்படுகிறது. தற்போதைய செல்லிடப்பேசி யுகத்திலும் அங்கே காதலர் தின வாழ்த்து அட்டைகள் வழங்குவது பிரபலமாகவே உள்ளது.

ரோஜாக்கள் பரிமாற்றம்: காதலர் தினத்தில் எதை பரிசாக வழங்காவிட்டாலும் ரோஜாக்களை பரிசாக வழங்குவது வழக்கம். அமெரிக்காவில் சராசரியாக காதலர் தினத்தன்று 22 கோடி.ரோஜாக்கள் விற்பனையாவதாக மலர்கள் விற்பனையாளர்கள் கூறுகின்றன. இந்த ரோஜாக்களைப் போட்டி போட்டு வாங்குவது 73 சதவீதம் ஆண்கள் தான் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றும் நம்மூர் (ஒசூர்) ரோஜாக்கள் ஏற்றுமதியாவதே இதற்கு சான்று.

இந்தியாவும் காதலும்: நமது நாட்டுக்கும் காதலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்திய இலக்கியங்களில் எல்லாம் பெரும்பான்மையாக காதல்தான் பிரதான இடத்தைப் பிடிக்கின்றன. உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில்தான் அமைந்துள்ளது. உலகத்தின் முதல் கலவி கல்வி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே என்பது குறிப்பிடத்தக்கது.

காதல்கோட்டை மலைக்கோட்டை: இத்தகைய சிறப்பு வாய்ந்த காதலர் தினத்தை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காதலர்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காதலர்களும் கொண்டாடுவதற்கு தேர்வு செய்வது மலைக்கோட்டை மாநகரைத்தான். காதலர்களின் கோட்டையாக விளங்குவதும் இந்த மலைக்கோட்டைதான். மலைக்கோட்டை உச்சியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு கீழே, உள்ள திறந்த வெளியில் ஜோடியாக அமர்ந்து, மாநகரின் அழகை ரசித்தபடியே தங்களது காதலையும் வளர்த்துக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. காதலர் தினத்தில் மட்டுமல்லாது நாள்தோறும் இங்கு காதல் ஜோடிகளை காண முடியும்.

முக்கொம்பு சுற்றுலா மையம்: மலைக்கோட்டைக்கு அடுத்தபடியாக அதிகளவில் காதல் ஜோடிகள் வருகை தரும் இடமாக உள்ளது முக்கொம்பு. காவிரி, கொள்ளிடம் பிரியும் தலமான இங்குள்ள அணைக்கட்டு, காவிரிக் கரை, கொள்ளிடம் கரை, முக்கொம்பு பூங்கா, விளையாட்டு ராட்டினங்கள், படகு சவாரி, ரயில் சவாரி என அனைத்திலும் காதல் ஜோடிகள் மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிவதும், மரங்களின் நிழலில் இளைப்பாறி, காதல் கதைகள் பேசுவதும் வாடிக்கை.

வண்ணத்துப் பூச்சி பூங்கா: திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் அருகே 25 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைந்துள்ளது. தமிழ்நாடு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு, எழிலுடன் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்காவில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. 110 வகையான பட்டாம் பூச்சிகளும் உள்ளன. இந்த பட்டாம் பூச்சிகளை பார்வையிடும் நோக்கில் காதலர்களும் பட்டாம் பூச்சிகளாக இந்த பறந்து திரிவது வழக்கமானது.

இதுமட்டுமல்லாது, காவிரி பாலம், திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள உய்யக்கொண்டான் கால்வாய் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பசுமை எழிலுடன் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை, வணிக வளாகங்கள், திருச்சி மாநகரத் திரையரங்குகள் அனைத்துமே காதலர்களின் புகலிடமாக விளங்குகின்றன.

ரோஜாக்கள் வருகை: திருச்சி மாவட்டத்தில் காதலர் தினத்திற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும், ஒசூரிலிருந்தும் பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் திருச்சி காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.

சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை, வயலட், ரோஸ் கலர் என அழகழகாக ரோஜா பூக்கள் 20 முதல் 25 எண்ணிக்கைகள் கொண்ட பெட்டியாக வந்துள்ளன. ஒரு பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒற்றைப் பூ ரூ.10 முதல் ரூ.20 வரை அதன் அழகு தோற்றத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தின் எட்டரை, போதாவூர் பகுதிகளில் இருந்தும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com