காதலர்கள் தவிர்க்கக் கூடாத திரைப்படங்கள்

மனதின் சிறகுகளை பறக்க விடாமல் பூட்டி வைக்க போட்டு வைத்த சாதி, மதம், இனம், மொழி, நிறம், பாலினம் என எல்லா எல்லைகளையும் கடக்க காதல் எனும் பறக்கும் கம்பளம் அவசியம் தேவை. அதில் ஏறி பயணப்பட்டு வாருங்கள்
காதலர்கள் தவிர்க்கக் கூடாத திரைப்படங்கள்
காதலர்கள் தவிர்க்கக் கூடாத திரைப்படங்கள்

காதல் மனித சமூகம் மட்டுமின்றி உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்டான ஒரு உணர்வாக உள்ளது. தமிழ் சமூகத்தில் சங்க காலம் முதலே காதல் குறித்த பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன.

தலைவனின் வரவிற்காக ஏங்கி நிற்கும் தலைவி எனத் தொடங்கி காதல் வயப்பட்ட தலைவன் தலைவியைக் காணச் செல்வதை விவரிப்பதுவரை காதல் தமிழ் இலக்கியங்களில் முக்கிய கவனத்தைப் பெற்றிருந்திருக்கிறது.

இலக்கியங்களில் பேசி வந்த காதல் தற்காலத்தில் அதிகம் திரையில் பேசப்படுகிறது. நகைச்சுவை, அரசியல், விறுவிறுப்பு என எந்த வகையான திரைப்படங்கள் வந்தாலும் காதல் என்கிற பொதுவான அம்சம் இல்லாமல் இன்றைய திரைப்படங்கள் வெளிவருவதில்லை. அப்படி தமிழ் திரைப்படங்களில் வழக்கத்திற்கு மாறாக காதலின் இயல்பு தன்மை மாறாமல் ரசிகர்களை கொள்ளையடித்த திரைப்படங்கள் இன்றும் நினைவு கூறப்படுகின்றன. 

அந்த வகையில் திரையில் வெளியாகி பல மாதங்கள் ஆனாலும் ரசிகர்களால் இன்றும் பேசுபொருளாக உள்ள காதல் திரைப்படங்களை இந்தக் கட்டுரையின் வாயிலாக பார்த்து விட்டு வரலாம். காதல் பருகக் கசக்காது என்பதால் வாசகர்களுக்காக இந்தக் கட்டுரை...தேன் கூட்டில் கிடைத்த 4 சொட்டு தேன் துளிகள் இவை...

7ஜி ரெயின்போ காலனி

பொதுவாக தமிழ் சினிமாவில் காதல் கதைகளைக் கையாள்வதில் காட்டி வந்த ஒரு மேட்டிமையை உதறித் தள்ளி நமது அக்கம் பக்கத்தில் நடப்பது போன்றதொரு தோற்றத்தை உருவாக்கி வெற்றி கண்டது 7ஜி ரெயின்போ காலனி.

பணி நிமித்தமாக மாற்றலாகி வந்த வட நாட்டு குடும்பம் ஒன்றின் இளம்பெண்ணுக்கும், தனது பகுதியில் எந்தவித கட்டுப்பாடுகளுக்குள்ளும் அடங்காமல் தன் மனம் சொல்லும் வழியில் வாழ்ந்து வந்த இளைஞனுக்கும் இடையே நடக்கும் ஒரு உறவை பற்றி மிக இயல்பாக பேசியது இந்தத் திரைப்படம்.

பொருளாதாரம் பெரும்காரணியாக மாறிவிட்ட சமூகத்தின் பார்வையிலான காதலை புறம்தள்ளி எந்த முன்முடிவுகளையும் மாற்றி மனதின் விருப்பத்தைத் தெரிவித்த இந்தத் திரைப்படம் அந்தக் கால காதலர்களின் மனதில் இருந்த சிம்மாசனத்தில் இடம்பிடித்தது. 

காதல் காமத்தைச் சார்ந்தது என்கிற புரிதலில் அணுகப்படுகிற வேளையில் அதன் இலக்கு காமம் மட்டுமானதல்ல என பலரையும் சிந்திக்க வைத்தது இத்திரைப்படம். கதையின் எல்லையை விட்டு பாயாத பாடல்களும் இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தைக் கொடுத்தன.

காதலர்களில் ஒருவர் இறந்தால் முடிந்து விடுகிற தமிழ் சினிமாவின் கதைக்களத்தில் அவற்றின் புனித பிம்பத்தை தூரம் வைத்து விட்டு வாழ்க்கையில் நினைத்துப் பார்த்து வாழக்கூடிய புதிய வாழ்விற்கான சாத்தியங்களை இயக்குனர் தந்திருந்தது வழக்கத்திற்கு மாறான ஒன்று.

இன்றைக்கும் அந்த 7ஜி ரெயின்போ காலனியை பலரும் கடந்து சென்றிருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இந்தத் திரைப்படத்தின் தாக்கத்தை தங்களது காதலில் நிகழ்த்திக் காட்டியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.   

காதலும் கடந்து போகும்

திடீரென வந்து மறையும் ஒருவர் நமது வாழ்க்கையில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்திவிடப் போகிறார் என்கிற கேள்வியை உங்கள் முன்வைத்தால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்? அதற்கான பதில் கதிரவனுக்கும், யாழினிக்கும் இடையேயான அந்தப் பயணமாகக் கூட இருக்கலாம்.

ஒரு பெண்ணாக சாதிக்கத் துடித்து வேலை தேடி அலையும் ஒரு பெண்ணின் வாழ்வை கூலிப்படையில் வேலை செய்யும் ஆண் ஒருவர் இடைமறித்தால் என்ன நடக்கும் என பேசிய படம் 'காதலும் கடந்து போகும்'.

ஒரு கூலிப்படைக்காரனைக் குறித்து வழக்கமான பார்வையில் இருந்த கதாநாயகிக்கு கதிரவனின் நடத்தையும், பழக்கமும் வேறு விதமான பார்வையைத் தருகிறது. திருடிய சிறுவர்களுக்காக கடைக்காரரிடம் சண்டையிடுவதும், அதன்பின் சிறுவர்களுக்கு அறிவுரை வழங்குவதும், புதிய வீட்டிற்கு வந்த யாழினிக்கு உதவ மறுப்பதாக தொடங்கிய கதிர், பின் மழையில் சென்று குடை வாங்கி வந்து தருவதும் கதிரவனின் வேறு பரிமாணத்தை அறிமுகம் செய்கின்றன.

யாழினிக்காக அவரது தந்தையிடம் பேசச் செல்வது, அலுவலக நேர்காணலில் சண்டை செய்வதின் மூலம் கதிர் யார் என்பதை சமூகத்தின் வினாவிற்கே விட்டுவிடலாம்.

முன்கட்டமைக்கப்பட்ட சமூகத்திற்கு கதிர் வேறு மாதிரியாக தெரிந்தாலும், யாழினியின் பார்வைக்கு கதிர் வேறு மாதிரியான நினைவாகிறார். நாகரிகமாக உடையணிந்த மனிதர்கள் மதிக்கத்தக்கவர்கள் என்கிற பிம்பம் தொடங்கி இவர்கள் இப்படித்தான் என்கிற பிம்பம் வரை யாழினியும் கதிரும் உடைத்துத் தள்ளியவை இந்தத் திரைப்படத்தில் ஏராளம்.

காதலை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளாத காதல் படம் ‘காதலும் கடந்து போகும்’. கதிருக்கும் யாழினிக்கும் இடையேயான அந்த மெல்லிய உறவு புரிந்துகொள்ளக்கூடிய அதேசமயம் விவரிக்க முடியாத உணர்வு. மீண்டும் ஒருமுறை பாருங்கள்.. கதிரை உங்களுக்கு பிடிக்கும். கதிரைத் தேடிய யாழினி நீங்களாகக் கூட இருக்கலாம்.

பண்ணையாரும் பத்மினியும்

இந்தக் கதை நமக்கு மிக நெருக்கமாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால் இந்த கதை நமது நினைவிற்கு ஒரு அலாரம் அடிக்கும். இந்தத் திரைப்படத்தில் இரு வேறு காதல் கதைகள் பேசப்பட்டன.

அனைவரையும் எந்த வரையரைகளையும் கொண்டு பார்க்காமல் சக உறவாகப் பார்க்கும் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையாருக்கு தற்செயலாக ஒரு கார் கிடைக்கிறது. கிராமத்திலேயே கார் வைத்திருக்கும் ஒரே வீடாகிறது பண்ணையார் வீடு. அதன் ஓட்டுநராகிறார் விஜய் சேதுபதி. கார் மீது பண்ணையாருக்கு ஒரு காதல் என்றால் ஓட்டுநர் விஜய் சேதுபதிக்கு ஒரு காதல். 

இந்தத் திரைப்படத்தில் அதிகம் பேசப்பட்டது பண்ணையாருக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான காதல்தான். திருமணத்திற்குப் பிறகு பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள முடியாத காதலை இருவரும் பகிர்ந்து கொள்வதை அழகாகக் காட்டியது இந்தத் திரைப்படம். வயதானால் காதலுக்கும் கட்டியணைத்தலுக்கும் தடைகோரும் சமூகத்தில் காதல் வயதைக் கடந்த உள்ளுணர்வு என பேசியது இந்தத் திரைப்படம்.

தனது மனைவிக்காக கார் ஓட்டக் கற்றுக்கொள்ள முயலும் பண்ணையார், அவர் கற்றுக்கொண்டால் தன்னை கார் ஓட்ட அனுமதிக்க மாட்டாரோ என அவருக்கு கற்றுத் தராமல் சமாளிக்கும் விஜய் சேதுபதி என ஒருவரை ஒருவர் முட்டி மோதி உணர்ந்து கொள்ளும் தருணம் அழகானது. காதல் வயோதிகத்தைக் கடந்தது. வயதைக் காரணம் கொண்டு காதலைத் தள்ளிப் போடாமல் காதலித்து வயதைத் தள்ளிப் போடலாம். அதனை முயற்சித்துப் பார்க்க சொல்லும் திரைப்படம் பண்ணையாரும் பத்மினியும்.

அங்காடித் தெரு

திரைக்கு வந்த போது உலகம் முழுவதும் அதிகம் பேசுபொருளாகிய திரைப்படம் அங்காடித் தெரு. உடை விற்பனையகத்தில் வேலை செய்து வந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான காதலைப் பேசிய படம். வாழ்வாதார சிக்கலில் ஓடும் அனைவருக்கும் இந்தத் திரைப்படம் பொருந்திப் போகும்.

மோதலில் தொடங்கிய பயணம் காதலாகும் என தமிழ் சினிமாவின் இலக்கணத்தைப் பிடித்த அங்காடித் தெரு முரண்பட்டுக் கொண்ட இடத்தில் காதலை பேசியது. வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்பதற்காக மனித சுக, துக்க உணர்வுகளை மதிக்காத சமூக அமைப்பில் எஞ்சி நிற்பது காதல் மட்டுமே.

கடை உரிமையாளருக்குத் தெரியாமல் காதலிப்பதில் தொடங்கி அந்த எல்லையை மீறினாலும் தவறல்ல என்கிற மதிலைக் கடக்க வைத்தது காதல் தான். மனித சமூகத்தின் லாப அழுக்குகளை காதல் எனும் நீரால் கழுவ முயற்சித்து வெற்றி பெற்றது அங்காடித் தெரு.

வேகமாக ஓடும் மாநகரில் சிக்கி சிதறி தப்பித்து வரும் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொள்ள முடியாத அதேசமயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய கதை இருக்கும். மாநகரின் விளம்பர இரைச்சலுக்கு மத்தியில் இந்த குரல்கள் ஏதேனும் ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும். 

வெடித்து சிதறும் இடமும், இடித்து தள்ளும் சூழலும் மீட்க முடியக் கூடிய இடம் தான். மீட்டு விடலாம் என்கிற நம்பிக்கையின் முகவரி அங்காடித் தெரு.

இறுதியாக... நீங்களும் உங்கள் காதலும் தான்...

ஆயிரம் திரைப்படங்கள் வெளிவந்தாலும் நம்மில் ஏற்படும் அந்த ரசாயன மாற்றத்தை முழுமையாக எந்தத் திரையிலும் காட்டி விட முடியாது. காதல் உங்களில் ஏற்படுத்திய வெட்கம், சிரிப்பு, ஏக்கம், அன்பு, வெறுப்பு, கோபம், அழுகை என அத்தனை தருணத்தையும் மறக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ எந்த வரையறையையும் கொண்டு வெளிப்படாத அந்த காதல் எனும் உணர்வு அதே அளவு உண்மையானது.

மனித மனதின் சிறகுகளை பறக்க விடாமல் பூட்டி வைக்க போட்டு வைத்த சாதி, மதம், இனம், மொழி, நிறம், பாலினம் என எல்லா எல்லைகளையும் கடக்க காதல் எனும் பறக்கும் கம்பளம் அவசியம் தேவை. அதில் ஏறி பயணப்பட்டு வாருங்கள். உலகம் அன்புக்கானது. உலகம் காதலுக்கானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com