இரு மனங்கள் பரிமாறும் காதல் கோட்டை

களங்கமில்லா காதலர்களுக்கு நாமக்கல் மலைக்கோட்டை என்றும் காதல் கோட்டையாக விளங்குகிறது. 
நாமக்கல் மலைக்கோட்டை
நாமக்கல் மலைக்கோட்டை

நாமக்கல்: நாமக்கல்லின் அடையாளச் சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டை.  246 அடி உயரம் கொண்ட ஒரே பாறையிலான இம்மலையில் 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் மதுரை திருமலை நாயக்கர், சேந்தமங்கலம் ராமச்சந்திர நாயக்கர் ஆகியோர் சேர்ந்து கோட்டையை வடிவமைத்ததாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த மலைக்கோட்டையில் கிழக்குப் புறம் நரசிம்மர் கோயிலும்,  மேற்குப் புறம் அரங்கநாதர் கோயிலும் குடவறைக் கோயில்களாக அமைந்துள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் திப்பு சுல்தான் இங்கு மறைந்திருந்து எதிரிகளைத் தாக்கினார் என்ற தகவலும் உண்டு. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கோட்டையின் மேற்பகுதியில் இஸ்லாமியர்களின் மசூதியும், வரதராஜப் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. மேலும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் வகையில் இயற்கையான நீச்சல் குளம் வடிவிலான குளம் ஒன்றும் உள்ளது.           

தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்கோட்டையில் விடுமுறை நாள்கள் மட்டுமின்றி விசேஷ நாள்களிலும் மக்கள் கூட்டம் காணப்படும். குறிப்பாக இளைஞர்கள், புதுமணத் தம்பதியர், காதல் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். நாமக்கல்லில் பொழுதுபோக்கிற்கு வேறு இடங்கள் இல்லாததால் மாலை வேளையில் இங்கு அதிக கூட்டத்தைக் காண முடியும். காதலர் தினம் நெருங்கும் வேளையில் ஜோடிகளின் வருகை தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது.

குறிப்பாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரை காதல் ஜோடிகளாக இங்கு அதிகம் காண முடிகிறது. நாமக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்தோரும் இம்மலைக்கோட்டையில் இனிமை காண வருகின்றனர்.

தனிமையில் இருக்க தகுதியான இடமாகவும் மலைக்கோட்டையை கருதுகின்றனர். கொளுத்தும் வெயிலின்போதும் கொதிக்கும் பாறை மீது அமர்ந்து  காதல் பிறந்த கதையையும், கடந்து போக உள்ள பாதையையும் பற்றி மணிக்கணக்கில் பேசுகின்றனர்.                     

ஆதாம்-ஏவாள் தொடங்கி வைத்த காதல் பாடத்தை கற்போர் எண்ணிக்கை இன்றளவும் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பருவ வயதைத் தொட்டவுடன் மீசை முளைக்கும் இளைஞர்களுக்கு காதல் ஆசை பிறந்து விடுகிறது. கல்லூரியில் தொடங்கிய காதல் தற்போது பள்ளியில் மேல்நிலை வகுப்புக்குச் செல்லும்போதே தொடங்கி விடுகிறது. இவ்வாறான காதலில் ஒன்றிரண்டு திருமண வாழ்க்கையை எட்டுகிறது. மற்றவை கனவோடு கலைந்து விடுகிறது.

பிப்.14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. நாமக்கல்லைப் பொருத்தவரை மலைக்கோட்டை தான் அவர்களது காதல் கோட்டை. காதலர் தினத்தன்று இங்கு ஏராளமான ஜோடிகளை காண முடியும். இரு மனங்கள் பரிமாறும் இந்த மலைக்கோட்டை காதலர் தினத்தில் காதலர்களின் ஓர் கொண்டாட்ட களமாக மாறியிருக்கும். இதய வடிவிலான கேக்கை வாங்கி வந்து அதனை வெட்டுவதும், தங்களுடைய காதலனுக்கு, காதலிக்கு அவற்றை ஊட்டி விட்டு மகிழ்வதும், ஒருவருக்கொருவர் முத்தமிட்டு அன்பை பரிமாறுவதையும் இந்த நாளில் காண முடியும்.

ஒன்றிரண்டு பூங்காக்கள் இருந்தாலும் அங்கு மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் உயர்ந்து வளர்ந்த மலைக்கோட்டை தான் காதலர்களின் சொர்க்கபுரியாகும். இது தற்போதைய நிகழ்வல்ல, பல ஆண்டுகளாக தொடரும் பயணம். களங்கமில்லா காதலர்களுக்கு நாமக்கல் மலைக்கோட்டை என்றும் காதல் கோட்டை தான்...

மற்றவர்களுக்கு….?       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com