கால்களை இழந்தால் என்ன? என் காதல், என் கணவன்!

விபத்தில் கால்களை இழந்த காதலனைப் பெற்றோரின் கடும் எதிர்ப்புக்கு இடையே கரம் பிடித்து வாழும் உண்மைக் காதலுக்குச் சான்றாக வாழ்ந்து வருகின்றனர் விஜய் - ஷில்பா தம்பதி.
விஜய் - ஷில்பா தம்பதி
விஜய் - ஷில்பா தம்பதி

காதலுக்கு கண் இல்லை என்று பலரும் கூறுவதுண்டு. அதற்குக் காரணம், உண்மையான காதல், உருவத்தை பார்ப்பதல்ல, அது உள்ளத்தைப் பார்த்து வருவதாகும். ஆனால், பரபரப்பான இந்த காலகட்டத்தில் அத்தகைய உண்மையான காதலுக்கு சாத்தியமில்லை என கூறுவோருக்குப் பதிலடியாக வாழ்ந்து வருகின்றனர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த விஜய் - ஷில்பா தம்பதி.

வாணியம்பாடி கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் விஜய், ஊட்டி மசினகுடியைச் சேர்ந்தவர் ஷில்பா. கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இருவரும் காதலித்துள்ளனர். பிஎஸ்சி கணினி அறிவியல் படிப்பை முடித்த விஜய், கடந்த 2018 ஆம் ஆண்டு வேலை தேடி பெங்களூருக்குச் சென்றுவிட்டு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தபோது திடீரென தவறி விழுந்ததில் அவரது இரு கால்களும் துண்டாகின.

ஏற்கெனவே விஜய்யைத் திருமணம் செய்ய மறுத்து வந்த ஷில்பாவின் பெற்றோர், விஜய் கால்களை இழந்த செய்தியறிந்து அவரைத் திருமணம் செய்ய கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஷில்பா வீட்டைவிட்டு வெளியேறி, தான் காதலித்த விஜய்யை அவர் சிகிச்சை பெற்றுவந்த வாணியம்பாடி மருத்துவமனையில் வைத்தே திருமணம் செய்துகொண்டார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் 2018 மார்ச் 31 ஆம் தேதி நடந்தது. தற்போது குடும்பத்தின் வறுமைக்கு மத்தியிலும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் இத்தம்பதிக்கு காதல் பரிசாக கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

உலகம் காதலர் தினம் கொண்டாடும் இவ்வேளையில், விஜய், ஷில்பா தம்பதியின் காதல் வாழ்க்கையை அறிவது காதலின் உன்னதத்தை உணர ஓர் வாய்ப்பாக அமையும்.

இதுகுறித்து விஜய் கூறியது:

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்தில் இரு கால்களை இழந்த போதே நான் திருமணம் செய்யும் தகுதியை இழந்துவிட்டதாக எண்ணி ஷில்பாவைத் தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டேன். சில நாள்கள் என்னிடம் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, எனது நண்பர்கள் மூலம் எனக்கு ஏற்பட்ட பாதிப்பை அறிந்த ஷில்பா, என்னைத் தேடித் தனியாக வாணியம்பாடி மருத்துவமனைக்கு வந்துவிட்டார். தவிர, கால்கள் போனால் என்ன, நான் உங்களுடன்தான் வாழ்வேன் எனக் கூறி எனக்கு நம்பிக்கை அளித்ததுடன், மருத்துவமனையில் வைத்தே இருவருக்கும் திருமணமும் நடத்தப்பட்டது.

அதன் பிறகு ஓராண்டு எனது வாழ்க்கை சிகிச்சையிலேயே கழிந்த நிலையில், தற்போது ரயிலில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நகலெடுக்கும் கடையில் வேலை செய்து வந்த ஷில்பா, டிசம்பர் மாதம் குழந்தை பிறந்ததால் தற்போது வீட்டில் இருந்து குழந்தையைக் கவனித்து வருகிறார்.

குடும்பம் நடத்த கடுமையான நிதி நெருக்கடி உள்ள போதிலும், காதலித்தபோது இருந்த அதே அன்பையும், அரவணைப்பையும் இன்றும் அளித்துக் கொண்டுள்ளார் ஷில்பா. இரு கால்களை மட்டும் அல்ல, இரு கண்களையும் இழந்திருந்தால்கூட உன்னைத்தான் திருமணம் செய்திருப்பேன் என்று கூறும் ஷில்பாவும், எனது குழந்தையும்தான் எனக்குக் கடவுள் தந்த வரங்களெனக் கருதுகிறேன் என்றார்.

இதுகுறித்து ஷில்பா கூறியது: இருவரும் காதலிக்கும்போதே விஜய், எனக்கு விபத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் என்னை விட்டுச் சென்றுவிடுவாயா என கேட்பார். அதற்கு, எனக்கு அப்படி ஏற்பட்டால் நீ எப்படி என்னை விட்டுச் செல்லமாட்டாயோ அதேபோல் நானும் விட்டுச் செல்ல மாட்டேன் எனக் கூறுவேன். ஆனால், அந்த உரையாடல்கள் எங்களது வாழ்க்கையில் நிஜமாகவே நடக்கும் என்பதைக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

கால்களை இழந்த விஜய்யைத் திருமணம் செய்துகொள்ள எனது குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்ததுடன், வேறு இடத்தில் வரன் பார்க்கவும் தொடங்கிவிட்டனர். அவர்கள் கூறியபடி வேறு இடத்தில் திருமணம் செய்திருந்தால்தான் இப்போதும் குற்ற உணர்ச்சியுடன் வாழ்ந்திருப்பேன். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பதைவிட இப்போது சற்று வறுமைதான் என்றாலும் எங்கள் வாழ்க்கை அன்பும் அரவணைப்புமாகக் கழிகிறது. இந்த அன்புக்கு மத்தியில் விஜய்க்கு கால்கள் இல்லை என்ற குறை இருவரது கண்களுக்கும் தெரிவதே இல்லை.

தவிர, நான் கருவுற்றிருக்கும் போது எனக்கு ஒரு ஆண் மகன் பிறக்க வேண்டும், அவனது கால்கள் விஜய்க்கு இருந்ததைப்போல் இருக்க வேண்டும் எனக் கடவுளிடம் வேண்டிக் கொள்வேன். அதேபோல், எனது மகன் முகம் மட்டும் என்னைப் போன்றும், கை, கால்கள் அனைத்தும் விஜய்யை போன்றே உள்ளன என்றார்.

இந்தத் தம்பதி இருவரும் பட்டப்படிப்பு முடித்துள்ள போதிலும், நிரந்தர வருவாயின்றிக் குடும்பம் நடத்த மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தவிர, கால்களை இழந்த விஜய்க்குச் சிகிச்சைக்காக வாங்கப்பட்ட கடனும் அவர்களது குடும்ப வாழ்க்கையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குவதால் இருவரும் அரசு அல்லது தனியார் நிறுவன உதவிகளை எதிர்நோக்கிக் காத்துள்ளனர்.

இருவருக்கும் நல்ல வேலை கிடைத்துவிட்டால் நிகழ்காலத்துடன் எதிர்காலமும் சுமையற்றதாக இருக்கும். காதலுக்கு முன்னுதாரணமாக வாழும் இந்தக் குடும்பத்தின் மீது கருணை மழை பொழியுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com