'காதல் என்பது..... பூவே உனக்காக’-த்தானே எல்லாம்!

காதலின் அர்த்தங்கள், உறவின் தேவைகள் அனைத்தும் நவீன காலகட்டத்திற்கு ஏற்ப மாறிவிட்டிருந்தாலும் சில காதல் கதைகள் இன்றும் நம்மை பரவசப்படுத்துபவை.
'காதல் என்பது..... பூவே உனக்காக’-த்தானே எல்லாம்!


காதலின் அர்த்தங்கள், உறவின் தேவைகள் அனைத்தும் நவீன காலகட்டத்திற்கு ஏற்ப மாறிவிட்டிருந்தாலும் சில காதல் கதைகள் இன்றும் நம்மை பரவசப்படுத்துபவை.

குறிப்பாக, 80-களில் பிறந்து 2000த்தை அடைந்த யுவன் - யுவதிகள் கொண்டாடிய காதல் இன்றைய அன்றாடத்தில் இல்லை. காதலித்தால் கரம்பிடிக்க வேண்டுமா என சிந்தித்துக்கொண்டிருக்கிறவர்கள் பெரும்பாலும் ’ஒரே செடி ஒரே பூ’ காதலைப் பார்த்து வளர்ந்தவர்கள்.

காதலைப் பற்றிய மேன்மையான உணர்வுகளுடன் இருந்தாலும் குறைந்தது ஆணோ பெண்ணோ இரண்டு, மூன்று காதல்களைக் கண்டுவிடுகிறார்கள். இதை மனரீதியாகவே இந்தத் தலைமுறை ஏற்றுக்கொள்கிறது. ஆனாலும், எந்தக் காலத்தில் பிறந்தாலும் மனிதனுக்கு தனக்கே தனக்கான ஒன்று என்பதைத்தான் விரும்புகிறான். முக்கியமாக, காதல்களில் அந்தச் சிக்கல் உண்டு. 

1996, பிப்.15 ஆம் தேதி விஜய் நடிப்பில் விக்ரமன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘பூவே உனக்காக’. காதலால் பிரிந்த குடும்பங்களை காதலைக் கொண்டே சேர்த்து வைப்பதுதான் கதையின் கருவாக இருந்தாலும்  படம் முழுவதிலும் நிறைந்த காதல்கள் நம்மை ரசிக்க வைக்கிறது.

குறிப்பாக இன்று மதம்விட்டு மதம் காதலிப்பதைப் பெற்றோர்கள் அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்ளாதபோது 25 ஆண்டுகளுக்கு முன் அது எத்தனை வீரியமாக இருந்திருக்கும்? படத்தில் இரண்டு மதத்தினரின் குடும்பங்களிலிருந்தும் யார் ஒருத்தரையாவது அதீத வில்லனாகக் காட்டினாலும் நம்மக்கள் கதாப்பாத்திரத்தையா உள்வாங்குவார்கள்? அவர் இருக்கும் மதத்தைத் தானே. விக்ரமனிடமிருந்த நேர்த்தியான திரைக்கதையால் ஒரு அழகான காதல் கதை சாதி, மதத்தைத் தாண்டி மக்களால் ’பூவே உனக்காக’-வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒருதலைக் காதலை சுமந்து திரியும் விஜய் ஒருகட்டத்தில் தான் விரும்பிய பெண்ணின் காதலாவது கைகூடட்டும் என அவருக்காக பிரிந்த குடும்பங்களை சேர்க்கப் போராடுகிறார். மறுபக்கம் விஜயின் மனைவி போல் நடிக்கும் சங்கீதா விஜயைக் காதலிக்கிறார்.

ஆக, இரண்டு காதல்கள், இரண்டு ஒரு தலைக்காதலர்கள் என காதலின் மென்மையான உணர்வுகளை படம் நெடுகிலும் கடத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, காதல் என்பது புரிதலைச் சேர்ந்தது என உணரும் நாயகன் எந்த வன்முறையையும் செய்யாமல், திரும்பத் திரும்ப பிடிக்காத பெண்ணிடம் காதல் தொல்லைகளைக் கொடுக்காமல் அவள் விரும்பிற வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பதுதான் இந்தப் படத்தின் உயிரோட்டம்.

கிட்டத்தட்ட தியாகமாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் புரிந்துகொள்கிற இடத்தில் நாயகன் இருப்பதும் அவனை அடுத்தகட்ட வாழ்க்கைக்கு நகரச் சொல்லும் காதலியும் இருப்பதால்தான் கால் நூற்றாண்டு கடந்தும் பூவே உனக்காக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்து- கிறிஸ்துவ மதப் பின்னணியில் வாழும் குடும்பங்களின் குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் ஒரு காதலுக்காக மீண்டும் இணையும் காட்சி, காதல் என்பது மேன்மையைத் தாண்டி வேறு எந்த அடையாளத்தையும் சுமக்காதது என்பதை உறுதியாக பார்வையாளர்களுக்குக் கடத்தியது மட்டுமில்லாமல் ஒரு பெண்ணை விரும்பிய பின் அவள் தனக்கு மட்டுமே ஆனவள் என இல்லாமல் அவளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அழுத்தமான காட்சிகளுடன் பதிவு செய்திருப்பதைக் கொண்டாடத்தான் வேண்டும்.

ஒரு நல்ல படைப்பு ஒட்டுமொத்தமாக கடந்த, நிகழ்கால, எதிர்கால தலைமுறைகள் என அனைவராலும் ரசிக்கப்பட வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம் பூவே உனக்காக. ஆனால், இதன் இறுதிக்காட்சியில் விஜய் ‘செடியில் இருந்த விழுந்த பூவை மீண்டும் ஒட்டவைக்க முடியாது’ என அமையாத தன் காதலை இனி வாழ்நாள் முழுக்க சுமக்க இருப்பதாகச் சொல்வார். இன்றைய வாழ்க்கைச் சூழல், பார்வைகளுக்கு இது நகைப்பை ஏற்படுத்துவது.

காதல் என்பது இறுதிவரை உடனிருக்கும். வாழ்நாள் முழுக்க யாரையாவது காதலித்துக்கொண்டே இருப்போம், யாராலாவது காதலிக்கப்பட்டுக் கொண்டே இருப்போம். அதனால், ஒரு காதலை முடித்துவைக்க வன்முறைகள் இல்லாமல் மென்புன்னகையுடம் ஒரு தேனீர் சந்திப்பில் பரஸ்பர மரியாதையுடன் அவரவர் பாதையைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர காதலின் உன்னதம் வேறில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com