தமிழ் சினிமாவில் காதலைக் கொண்டாடிய 90 : முக்கியமான காதல் படங்கள்

90களில் காதலை மையப்படுத்தி உருவான படங்கள் குறித்து ஒரு பார்வை 
தமிழ் சினிமாவில் காதலைக் கொண்டாடிய 90 : முக்கியமான காதல் படங்கள்


தமிழ் சினிமா ரசிகர்கள் பல்வேறு விதமான காதல்களைப் பார்த்திருக்கின்றனர். பார்க்காமல் காதல், சொல்லாமல் காதல், ஒரு தலைக் காதல், கடிதம் மூலம் காதல், தொலைபேசி வாயிலாக காதல், இன்றைய சமூக வலைதள காதல் என எண்ணற்ற காதல்களை திரையுலகம் கண்டிருக்கிறது. காதலுக்கு அடிப்படையான அன்பு மட்டும் மாறவேயில்லை. 

திரைப்படங்கள் உருவான காலம் தொட்டு இன்று வரை காதலை பேசி வந்தாலும், மக்களுக்கு அது சலிக்கவே இல்லை. காரணம் மக்களின் 
உணர்வோடு காதல் கலந்திருக்கிறது. 

முதலில் சொன்னதுபோல இந்தியாவில் திரைப்படங்கள் தயாரிக்கத் துவங்கியதிலிருந்து அவற்றில் காதல் பேசப்பட்டு வந்தாலும், அந்தப் படங்களில் எல்லாம் காதல் ஒரு அங்கமாகவே இருக்கும். ஆனால் 90களின் காலக்கட்டத்தில்தான் காதலை மையப்படுத்திய படங்கள் ஆதிக்கம் செலுத்தின.

தலைப்புகளில் கூட காதலே நிம்மதி, காதலுக்கு மரியாதை, காதல் கோட்டை, லவ் டுடே, காதலா காதலா, காதல் தேசம், காலமெல்லாம் காதல் வாழ்க, காதலுடன், காதலர் தினம் என அதிக படங்கள் வெளிவந்தன. காதலை பேசினால் மட்டுமே வெற்றி என்று அந்த நிலை அப்பொழுது இருந்தது. 

இன்றைய உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா எல்லோரும் காதல் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள். 

90களில் வெளிவந்த முக்கியமான காதல் படங்கள் குறித்து ஒரு பார்வை 

பூவே உனக்காக 

ஒரு செடியில் ஒரு பூதான் பூக்கும் என இந்தப் படத்தின் வசனங்கள் இன்றளவும் பிரபலம். நடிகர் விஜய்க்கு குடும்ப ரசிகர்களை, குறிப்பாக பெண் ரசிகர்களைப் பெற்றுத்தந்த படம். 

இந்தப் படத்தில் தான் காதலிக்கும் பெண் தன்னைக் காதலிக்கவில்லை எனத் தெரிந்தும் அவர் காதலை சேர்த்துவைக்க முயலும் ஒரு இளைஞனின் 
போராட்டமே படத்தின் கதை. அட எத்தனை காதல் என கேட்கிறீர்களா? காதலர் தினமாச்சே. காதலால் பிரிந்த குடும்பத்தை இணைக்க, அந்த வீட்டிற்கு பேரனாக செல்வார் விஜய். அங்கு அவர்களது உண்மையான பேத்தியான சங்கீதாவும் வர, அதன் பின்னாள் நடக்கும் நிகழ்வுகளைக் நகைச்சுவை கலந்துசொல்லியிருப்பார் இயக்குநர் விக்ரமன். படத்தில் ஒவ்வொரு வசனங்களும் அழுத்தமாக இருக்கும். எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்களும் லா லா பின்ணனி இசையையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கும். இறுதியில் மனதில் நின்ற காதலியே.. என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க விஜய் தனது பையை தோளில் போட்டு கிளம்பும்போது அனைவரின் கண்களும் குளமாகியிருக்கும். 

இன்று யோசித்து பார்த்தால் இதெல்லாம் சாத்தியமா என்றுகூட தோன்றும். ஆனால் அன்றைய இளைஞர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலித்தது 
இந்தப் படம். 

காதல் கோட்டை 

பார்க்காமலேயே காதல் என யாரும் நம்ப முடியாத ஒரு விஷயத்தை மிக யதார்த்தமாக பதிவு செய்து, தமிழின் முதல் தேசிய விருது பெற்ற இயக்குநர் 
என்ற பெருமையை அகத்தியன் பெற்றார். 

ரயிலில் திருடப்படும் கமலியின் கைப்பை சூர்யாவிடம் கிடைக்க, அதனை கமலியின் முகவரிக்கு அனுப்பி வைப்பார். அதற்கு கமலி நன்றி சொல்லி பதில் கடிதம் அனுப்ப என நலம் நலம் 
அறிய ஆவல் என கடித பரிமாற்றம் காதலில் போய் முடிகிறது.

சூர்யா இருப்பதோ ஜெய்பூரில், கமலியோ ஊட்டியில் இருப்பார். இதனை குறிப்பிடும் விதமாக நலம் நலம் அறிய ஆவல் பாடலில் தீண்ட வரும் 
காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே என ஆண் பாட, வேண்டும் ஒரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே என்று மிக இயல்பாக பதிவு 
செய்திருப்பார் இயக்குநர் அகத்தியன். இயக்குநர் அகத்தியன்தான் இந்தப் பாடலை எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது. 

காதல் கோட்டை படத்தின் இறுதி காட்சி மிக பிரபலம். கமலி அனுப்பி வைத்த ஸ்வட்டரில் இருக்கும் தாமரைதான் அவர்களை ஒன்று சேர்க்கும். இருவரும் ஒன்று 
சேர்வார்களா மாட்டார்களா என பார்வையாளர்களை இருக்கை நுனிக்கே வரவழைத்தது. சிகப்பு லோலாக்கு, கவலைப்படாதே சகோதரா போன்ற 
தேவாவின் பாடல்கள் படத்துக்கு பலமாக அமைந்தது. 

இதயம் 

மருத்துவக் கல்லூரி மாணவரான ராஜா, தனது உடன் படிக்கும் கீதாவை ஒரு தலையாக காதலிக்கிறார். தான் காதலை சொன்னால் எங்கு கீதா 
ஏற்காமல் போய்விடுவாரோ என்ற அச்சத்தில் காதலை சொல்லாமலேயே தவிர்க்கிறார். அதன் காரணமாக இதய நோய்க்கு ஆளாகிறார். 
அதிர்ச்சிகரமான செய்தியை சொன்னால் ராஜாவின் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் தான் கீதாவுக்கு அவர் மீது காதல் வருகிறது. இப்பொழுது 
வரை இளைஞர்கள் காதலை சொல்ல தயங்கினால் அவர்களை இதயம் முரளி என அழைக்கும் அளவுக்கு அந்தப் படம் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது. ஏப்ரல் மேயிலே, பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, ஓ 
பார்டி, இதயமே என இந்தப் படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரும் வகித்தது என சொல்லலாம். இதே பாணியில் 90களில் நிறைய படங்களில் முரளி 
நடித்தார். 

சொல்லாமலே 

காதலுக்காக ஒருவர் தன்னை வறுத்திக்கொண்டார் என்று சொன்னால் பைத்தியக்காரன், முட்டாள் என அவரைத் திட்டுவோம். ஆனால் அதனை 
நம்பும்படி யதார்த்தமாக சொல்லியிருப்பார் இயக்குநர் சசி.

 லிவிங்ஸ்டனுக்கு தனது அழகின் மேல் ஒரு தாழ்வு மனப்பான்மை தோன்றுகிறது. இந்த நிலையில் தன்னை வாய் பேச முடியாதவன் என்ற பரிதாபத்தில்தான் கௌசல்யா தன்னிடம் பழகுகிறார் என்று அவரிடம் ஊமையாக நடிக்கத் துவங்குகிறார். ஒரு கட்டத்தில் 
கௌசல்யாவும் தன்னை உண்மைாகவே நேசிப்பதாக தெரிந்து அவரை ஏமாற்ற விரும்பாமல் பொய்யை உண்மையாக்க நாக்கை வெட்டிக்கொள்கிறார். இறுதிக்காட்சியில் பிரகாஷ் ராஜ் அந்த உண்மையை சொல்லும்போது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  

பம்பாய் 

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான படம். பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்து - முஸ்லிம் பிரச்னை உச்சத்தில் இருந்த சமயத்தில் வெளியான படம் பம்பாய். இந்து இளைஞனும் முஸ்லிம் பெண்ணும் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டு மும்பையில் திருமணம் செய்துகொள்கின்றனர். அங்கு இந்து - முஸ்லிம் கலவரம் அவர்களின் வாழ்வை குறிக்கிடுகிறது. 

உண்மையில் முஸ்லிமான நாசர் ஹிந்துவாகவும், இந்துவான கிட்டி முஸ்லிமாகவும் நடித்திருப்பர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது. குறிப்பாக கண்ணாலனே, உயிரே பாடல்கள் காதலர்கள் மத்தியில் மிக பிரபலம். இறுதியில் மலரோடு மலரிங்கு பாடலில் மதம் என்னும் மதம் ஓயட்டும் என்ற வரிகளின் மூலம் மனிதத்தின் தேவையை உணர்த்தியிருப்பார் வைரமுத்து. 

காதலுக்கு மரியாதை 

அனியாதிபிராவு என்ற மலையாளப் படத்தின் தமிழ் பதிப்புதான் காதலுக்கு மரியாதை. மலையாளத்தில் இயக்கிய ஃபாசிலே தமிழிலும் இயக்கினார். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழிலும் கதநாயகியாக நடித்திருந்தார் ஷாலினி. நடிகர் விஜய்க்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம். ஜீவா என்கிற இந்து இளைஞனுக்கும், மினி என்கிற கிருத்துவ பெண்ணுக்கும் இடையேயான காதல், இருவரின் குடும்பத்தினரின் எதிர்ப்பு என மிக யதார்த்தமாக பதிவு செய்த படம். இந்தப் படத்தின் இறுதிக்காட்சிதான் படத்தைக் குடும்பங்கள் கொண்டாட காரணமாக அமைந்தது. 

தங்கள் குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ள விரும்பாத ஜீவாவும், மினியும் தங்கள் வீட்டிற்கே செல்வர். மினியின் செயின் ஜீவாவிடம் இருக்க, அதனை அளிப்பதற்காக ஜீவாவின் குடும்பம், மினியின் வீட்டிற்கு செல்ல அங்கு இரு குடும்பத்துக்கும் பிடித்துவிடும். இத விட நல்ல பொண்ணா ஜீவாவுக்கு பார்க்க என்னால முடியாதுங்க என ஸ்ரீவித்யா சிவகுமாரிடம் சொல்லும் காட்சி பார்வையாளர்களை நெகிழச் செய்தது. குறிப்பாக இறுதிக்காட்சியில் 5 நிமிடங்கள் உரையாடல்களே இல்லாமல் இருக்கும். இரு குடும்பமும் பேசிக்கொள்ள வார்த்தைகள் இல்லாமல் தவிப்பர். அந்தக் காட்சியில் இசையின் மூலம் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்கு கடத்தியிருப்பார் இளையராஜா. 

காதலர் தினம்

காதலின் பார்க்காமல் காதல், கடிதம் மூலம் காதல், தொலைபேசி வழியாக குரல் கேட்டு காதல் என்ற வரிசையில் இணையம் வழியாக காதல் என்ற காதலின் அடுத்த பரிணாமத்தைப் பற்றி பேசியது இந்தப் படம். இணையத்தின் வழியாக காதலித்துக்கொள்ளும் குணாலும் சோனாலி பிந்த்ரேவும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.   

கடலுக்கு ஃபிஷ்ஷிங் நெட்டு, காதலுக்கு இண்டர்நெட்டு என ஓ மௌரியா என்ற ஒற்றைப் பாடலின் மூலம் இணைய வழியாக காதல் என்பதை மிக எளிமையாக புரியவைத்திருப்பார் கவிஞர் வாலி. இந்தப் படத்தில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகள் மிக பிரபலம். பெண் போன்று இணையம் வழியாக கவுண்டமணியை சின்னி ஜெயந்த் ஏமாற்றுவார்.  இன்றைய சமூக வலைதள காலகட்டத்தில் முதல் ஃபேக் ஐடி என இந்தக் காட்சியை நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு. ரஹ்மானின் பாடல்களும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் படத்தின் சிறப்பம்சம்ங்கள்.

காதல் தேசம், லவ் டுடே,  கண்ணெதிரே தோன்றினால் போன்ற படங்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com