காதலால் உருவான வரலாற்று நகரம் ராணிப்பேட்டை

பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள ராணிப்பேட்டை நகரம், நட்பு, வீரம், காதல் என வரலாற்று சம்பவத்தின் அடிப்படையில் உருவானதாக வரலாறு கூறுகிறது.
ராஜா - ராணி நினைவுச்சின்னம்
ராஜா - ராணி நினைவுச்சின்னம்

பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள ராணிப்பேட்டை நகரம் பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள் மற்றும் பிஜப்பூர் சுல்தான், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள்  ஆகியோரின் ஆளுமைக்குட்பட்ட பகுதியாக இருந்து, தொடர்ந்து 1908ல் தென் ஆற்காடு, வட ஆற்காடு என இரண்டு மாவட்டங்களாக இருந்தபோது ஆங்கிலேயர்களின் முக்கிய ராணுவ மையமாக இருந்துள்ளது.

ராணிப்பேட்டை நகரம் உருவான வரலாறு

பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள ராணிப்பேட்டை நகரம், நட்பு, வீரம், காதல் என வரலாற்று சம்பவத்தின் அடிப்படையில் உருவானதாக வரலாறு கூறுகிறது. மராட்டிய மன்னன் வீர சிவாஜியின் மகன் ராஜாராமிடம் இருந்து செஞ்சிக் கோட்டையை கி.பி.1697 ஆம் ஆண்டு ஒளரகங்கசீப்பின் போர்ப்படைத் தளபதி ஜூல்பிகார்கான் போரிட்டுக் கைப்பற்றினார்.

பின்னர் செஞ்சிக்கோட்டையை சொரூப்சிங் எனும் ராஜபுத்திர அரசனிடம் ஒப்படைத்தான். தில்லியில் குதிரையை அடக்கச் சென்ற சொரூப்சிங் அதில் தோல்வி கண்டார். இதனால் முகலாய மன்னர், அவரை சிறையிலிட்டார். இதை அவரது தாயார் ரமாபாய், 15 வயதுடைய மகன் தேசிங்கிடம் தந்தையின் நிலை குறித்துச் சொன்னார்.

இதையடுத்து தேசிங்கு தில்லி சென்று நீலவேணி என்ற குதிரையை அடக்கி, அதை பரிசாகப் பெற்று தந்தையை மீட்டார். மேலும், தில்லி மன்னர் தேசிங்கின் வீரதீரச் செயலை பாராட்டும் விதமாக தில்லி சேனைத் தலைவர் பீம்சிங்கின் மகள் ராணிபாயை திருமணமும் செய்து வைத்தார். ஆனால் சோதிடர்கள் கூறியபடி குறிப்பிட்ட காலம் வரை தேசிங்கு ராஜா தனது மனைவி ராணிபாயுடன் சேர்ந்து வாழக்கூடாது என கூறியதைத் தொடர்ந்து ராணிபாயை செஞ்சிக்கோட்டை கன்னிமாடத்தில் சகல வசதிகளுடன் தங்க வைத்தார். இந்த சூழலில் இரண்டு ஆண்டுகளுக்குள் சொரூப்சிங் இறந்தார். அவர் தில்லி மன்னருக்கு கப்பம் செலுத்தாமலிருந்தார். இந்நிலையில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தேசிங்கு தானாகவே ராஜாவாக முடிசூட்டிக் கொண்டார். இதனால் ஆற்காடு நவாப் சாதத்துல்லா கானுக்கும், தேசிங்கு ராஜாவுக்கும் பகை ஏற்பட்டது.

தனது அரசுக்கு கப்பமாக செலுத்த வேண்டிய வரித்தொகையை செலுத்தாததால் ஆத்திரமடைந்த நவாப் போருக்கு திட்டமிட்டார். தேசிங்கின் ஆருயிர் நண்பன் வழுதாவூர் பாளையக்காரர் மகன் மகமத்கானின் திருமண நாளன்று, செஞ்சி மீது நவாப் படையெடுத்தார். திருமணத்தையும் நடத்தாமல் தேசிங்கின் அழைப்பினால் போருக்கு விரைந்தார் மகமத்கான். நவாப் படையினரை புறமுதுகிட்டு செல்லும் வகையில் கடுமையாக போர் புரிந்தார் மகமத்கான். நவாப் படையினர் சூழ்ச்சியினால் மகமத்கானை மறைந்து நின்று குத்துவாளால் கொன்றனர். நண்பரின் மரண செய்தி கேட்டு துடித்த ராஜாதேசிங்கு அதிவேகமாக போர்க்களத்திற்கு வந்தார். தேசிங்கு ராஜா  500 படைவீரர்கள், 300 குதிரைகள் கொண்ட படையை வழி நடத்தி நவாப்பின் 8 ஆயிரம் குதிரைப்படை, 10 ஆயிரம் காலாட்படைகள் கொண்ட பெரும் சேனையை எதிர்த்து வீரமுடன் போரிட்டார்.

இதையறிந்த நவாப் மேலச்சேரி, மேல்மலையனூர், தேவனூர், அன்னமங்கலம் ஆகிய ஊர்களை சேர்ந்த ஏரிகளை உடைத்தார். சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டது. இதை எல்லாம் எதிர்கொண்டு கடலி பகுதியில் நடந்த போர்க்களத்தில் நீலவேணி குதிரையின் கால்கள் வெட்டப்பட்டன. தனி ஆளாக தரையில் போரிட்ட தேசிங்கின் முதுகிற்கு பின்னால் சுட்டனர். வீரனுக்கு முதுகில் அடிபட்டு இறப்பது இழுக்கு என்பதால் தனது உடைவாளை விண் நோக்கி வீசி மார்பில் இறக்கி போர்க்களத்திலேயே கி.பி.1714 ஆம் ஆண்டு வீர மரணத்தை தழுவினார். அடிமையாக வாழ விரும்பாத சிறந்த மாவீரனின் மரணத்தைக் கண்ட நவாப் வேதனை அடைந்தான். அவரது உடலை செஞ்சிக்கு கொண்டு வந்து இந்து சமய முறைப்படி தகனம் செய்தார். தேசிங்கு ராஜா உயிர் துறந்த செய்தியை அறிந்து அங்கு ஓடிவந்த பட்டத்து ராணியான ராணிபாய் தன் கணவனின் சிதையுடன் உடன்கட்டை ஏறி அன்றே உயிர்த்துறந்தாள்.

இதில் மகமத்கானின் நட்பு, தேசிங்கு ராஜாவின் வீரம், ராணிபாய் தன் கணவர் மீது கொண்ட உண்மையான காதல்  ஆகியவற்றைக் கண்டு வியந்த ஆற்காடு நவாப் ராஜா, ராணியின் அஸ்தியை கொண்டு வந்து பாலாற்றின் வட கரையில் நினைவு மண்டபங்கள் எழுப்பினார். மேலும் ராணியின் நினைவாக ராணிப்பேட்டை என்ற நகரை நிர்மாணித்தார். அதேபோல் ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள் நேர் எதிரே பாலாற்றின் தென் கரையில் மகமத்கானின் சமாதி உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த வரலாற்று நிகழ்வின் அடையாளமாக உருவான ராணிப்பேட்டை நகரம் சரித்திர புகழ்பெற்ற நகரமாக விளங்குகிறது. இதன் காரணமாக 'தேசிங்கு ராஜா' வரலாற்றில் வாழும் அரசர்களில் குறிப்பிடத்தக்கவராக திகழ்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com