கலப்புத் திருமணங்களை நடத்தி வைக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர்!

தமிழகம் முழுவதும் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து வருகிறார் ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர் கே. அழகேசன்.
ஆசிரியர் கே. அழகேசன்
ஆசிரியர் கே. அழகேசன்

தமிழகம் முழுவதும் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து வருகிறார் ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர் கே. அழகேசன்.

இவர் தமிழ்நாடு கலப்புத் திருமண தம்பதிகள் சங்கத்தை நிறுவி அதன் மூலம் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்து வருகிறார். தொடர்ந்து கலப்புத் திருமணத்தை நடத்தி வைப்பதால் இவரை கலப்புத் திருமண வாத்தியார் என்றே சேலம் பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

இதுகுறித்து அவர் கூறியது: 

சேலத்தில் கடந்த 1984 இல் தமிழ்நாடு கலப்புத் திருமண தம்பதிகள் சங்கத்தைத் தொடங்கி நடத்தி வருகிறோம். இச்சங்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் கலப்புத் திருமணங்களை நடத்தி வருகிறோம். நான் கலப்புத் திருமணம் சங்கத்தை நிறுவி பணிகளை செய்து வந்த போது, நிகழ்ச்சி ஒன்றில் கலப்புத் திருமணம் செய்தேன்.

பொதுவாக கலப்புத் திருமணங்களுக்கு பெற்றோர்கள், சாதி அமைப்புகள், காவல்துறையினரிடம் இருந்து பல்வேறு பிரச்னைகள் வரும். அவர்களை முறையாகப் பாதுகாத்து சட்ட ரீதியாக அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து பதிவு செய்து தருகிறோம்.

கலப்புத் திருமணம் செய்ய வருவோர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம்.

கலப்புத் திருமணம் செய்வோருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவியைப் பெற்று தர ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கி வருகிறோம். மத்திய அரசு, அம்பேத்கர் அறக்கட்டளை மூலம் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்குகிறது. மாநில அரசு ரூ.50 ஆயிரம் நிதியுடன் 1 பவுன் தங்கம் வழங்குகிறது. கலப்புத் திருமணம் செய்வோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை உண்டு.

கலப்புத் திருமணம் செய்வோர் தங்களது பெற்றோரை பிரிந்து தனியே இருந்தாலும் அவர்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான நிதியுதவி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.

அதேவேளையில் கலப்புத் திருமணங்களை நடத்தி வைக்கும்போது சாதி அமைப்புகள், அடியாட்கள் மூலம் மிரட்டல் வரும்.

என்னைப் பொருத்தவரை குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள், நாடக காதல் நடத்துகின்றனர் என அரசியல் கட்சியினர், சாதி அமைப்புகள் குற்றம் சுமத்துவது பொய் பிரசாரம் என்றே சொல்வேன். கலப்புத் திருமணங்களை பொருத்தவரை இருவரும் ஒத்த கருத்துடன் காதலித்து தான் திருமணத்திற்கு வருகின்றனர்.

அதேபோல பெற்றோர் சொத்து தரவில்லையெனில் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருகிறோம் என தம்பதிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

மேலும், கலப்புத் திருமணம் செய்ய வருவோரை முழுமையாக விசாரித்துதான் திருமணம் நடத்தி வைக்கிறோம். கலப்புத் திருமணம் செய்து கொண்ட இளைஞர்கள், தங்கள் மனைவி சொத்து, நகைகளுடன் வரவேண்டும் என நினைக்கவில்லை. மாறாக அவர்கள் சொந்த உழைப்பில் மனைவிக்கு தேவையான விஷயங்களை செய்து வருகின்றனர்.

கலப்புத் திருமணத்தைப் பொருத்தவரை திருமணத்திற்குப் பிந்தைய வாழ்வியல் பிரச்னைக்கு ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கி வருகிறோம்.

மேலும் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களில் அதிக விவாகரத்து நடைபெறுகிறது. கலப்புத் திருமணங்களில் விவாகரத்து பெரிய அளவில் நடைபெறவில்லை. கலப்புத் திருமணத்திற்குப் பிறகு பெற்றோர் உள்ளிட்டோரை 10 ஆண்டுகளாவது சந்திக்காமல் இருக்க ஆலோசனைகளை வழங்குகிறோம். இதனால் கணவன், மனைவி யாருடைய தலையீடும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்கின்றனர். கலப்புத் திருமணத்தில் உறவினர்களுடன் சண்டையோ, சச்சரவோ இல்லை. வரதட்சணை கொடுமையும் இல்லை. கலப்புத் திருமணம் நடத்தி வைக்குமாறு வரும் தவறான இளைஞர்களை கண்டித்து அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com