டாக்டர் சௌந்தரம் - ஜி. ராமச்சந்திரன்
டாக்டர் சௌந்தரம் - ஜி. ராமச்சந்திரன்

காதல் மணம்புரிந்து சேவை வாழ்க்கை நடத்திய 'காந்திகிராம' தம்பதிகள்!

டி.வி. சுந்தரம் ஐயங்காரின் குடும்பத்தில் மகளாகப் பிறந்த சௌந்தரம், அன்றைய நாளிலேயே புரட்சிகர காதல் திருமணத்தை குடும்பத்து எதிர்ப்பையும் மீறி செய்தவர். திருமணத்தை நடத்திவைத்தவர் காந்தி.

மிகவும் புரட்சிகரமான சிந்தனைகள் மற்றும் காந்திய சிந்தனைகளுக்கு உதாரணமாகக் காட்டப்பட்ட டிவிஎஸ் குழுமத்தின் டி.வி. சுந்தரம் ஐயங்காரின் குடும்பத்தில் மகளாகப் பிறந்த சௌந்தரம், அன்றைய நாளிலேயே புரட்சிகர காதல் திருமணத்தை குடும்பத்து எதிர்ப்பையும் மீறி செய்தவர். திருமணத்தை நடத்திவைத்தவர் காந்தி.

இந்த புரட்சிகர காதலுக்கு ஊற்றாக அமைந்திருந்ததும் காந்தியின் சேவா கிராம் ஆசிரமம்தான். கணவரை மிக இளம் வயதிலேயே பறிகொடுத்தவரான  சௌந்தரம், இங்குதான், ஜி. ராமச்சந்திரனை சந்தித்தார்.

சௌந்தரம், மறைந்த கணவரின் ஆசைப்படி தில்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார்.

மருத்துவம் படிக்கும்போது சௌந்தரத்துக்கு அறிமுகமானவர் சுசீலா நய்யார்.  அவருடன் சென்றுதான் காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பு சௌந்தரத்தின் வாழ்க்கையையே மாற்றியது.  உடனே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட எண்ணினார். ஆனால், மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இங்கு வா என்று சொன்னார் காந்தி.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மகளிர் நோய் மற்றும் மகப்பேறு இயல் பட்டமும் பெற்று 32வது வயதில் மருத்துவப் படிப்பை முடித்தார். அடுத்த நேராக சென்றது காந்தியின் சேவா கிராம் ஆசிரமம்.

தமிழகத்திலேயே மிகுந்த செல்வமும் செல்வாக்கும் நிறைந்த குடும்பத்தில் பிறந்த செளந்தரம், காதி உடுத்தினார். கழிப்பறைகளை சுத்தம் செய்தார். வெறும் தரையில் படுத்துறங்கினார்.

காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கிராம வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திக் கொண்டிருந்த சௌந்தரம் இங்குதான் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரான ஜி. ராமச்சந்திரனை சந்தித்தார்.  இருவருக்கும் காதல் மலர்ந்தது.

ஆசிரியராக பணியாற்றிய ராமச்சந்திரன், ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். சிறந்த நல்லாசிரியர் விருதும் பெற்றவர். காந்தியுடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைச் சென்றவர். மிகச் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தார். 

தங்களது காதல் எண்ணத்தை இருவரும் காந்தியிடம் சொன்னார்கள். காந்தியும், ராஜாஜியும், சௌந்தரத்தின் தந்தை ஐயங்காரிடம் மகளுக்கு மறுமணம் செய்விக்க அனுமதி கோரினர். ஆனால், சுந்தரம் ஐயங்கார் ஏனோ.. இந்தத் திருமணத்துக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்.

காந்தி செய்வதறியாது போனார். உடனே சௌந்தரம் - ராமச்சந்திரனை அழைத்து, ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடாது, கடிதப் போக்குவரத்தும் கூடாது. ஓர் ஆண்டு முடிந்ததும் உங்களுக்குள் இதே காதல் இருந்தால் யார் எதிர்த்தாலும் உங்களுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார் காந்தி.

காந்தியின் சொல்படி ஓராண்டு முழுவதும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருந்தனர் காதலர்கள். பிறகு ஓராண்டு முடிந்து காந்தியை வந்து சந்தித்தபோது, இவர்களின் காதலின் உறுதியை புரிந்துகொண்டார் காந்தி.

1940ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி  ராஜேந்திர பிரசாத் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில்  சேவாகிராமில் உள்ள காந்தி ஆசிரமத்தில் மிக எளிமையான முறையில் சௌந்தரம் - ராமச்சந்திரனுக்கு புரட்சிகர காதல் திருமணம் செய்து வைத்தார் காந்தி. எத்தனையோ திருமணங்களை புரட்சித் திருமணம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் இதுதான் புரட்சிகர திருமணமாக அமைந்தது.

இந்த திருமணத்தின் போது, காந்தியின் மனைவி கஸ்தூரிபா நூற்ற கதர் சேலையை சௌந்தரத்துக்குப் பரிசளிக்க, அதையே உடுத்திக்கொண்டு வந்து திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது வெறும் காதல் திருமணமல்ல.. புரட்சிகர திருமணம். ஏன் என்றால், விதவை மறுமணம், வெவ்வேறு சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு மொழிப் பின்புலம் கொண்டவர்கள், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என எல்லாவற்றையும் தாண்டி, பெற்றோர் சம்மதமின்றி திருமணம் என்பதால் இந்த திருமணம் அன்றைய காலகட்டத்தில் பெரும் புரட்சியாகப் பார்க்கப்பட்டது. பேசப்பட்டது.

காதலர்களாக இருந்து தனித்தனியே செய்துவந்த சமூக நலப் பணிகளை இருவரும் தம்பதிகளாக மேற்கொண்டனர், புதிய உத்வேகத்துடன்.  1942 முதல் சௌந்தரம் நேரடியாக சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினார்.

இவர்களது சிறப்பான பணியும் திறமையும் காந்தி தொடங்கிய கஸ்தூரிபா டிரஸ்ட்டின் தென்னிந்திய நிர்வாகிகளாகப் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியது. காந்தியின் வழிகாட்டலில் இந்தக் காதல் தம்பதி சமூகப் பணிகளில் மென்மேலும் உயர்ந்தனர். சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் சௌந்தரம் கையில் காஸ்தூரிபாவின் ஓவியத்தைத் தந்த காந்தி, அறக்கட்டளையின் தென்னிந்திய நிர்வாகியாக இவர்களை அறிவித்தார்.

அதுவரை சமூக நலப்பணி என்ற வகையில் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த இருவருக்கும், எந்த வசதி வாய்ப்பும் இல்லாத பின்தங்கிய கிராமங்களில் தற்சார்புகொண்ட காந்தி கிராமங்களை இந்தியா முழுவதும் தொடங்க வேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்கவேண்டும் என்ற எண்ணம் உருவானது.

இதற்காக சௌந்தரமும் ராமச்சந்திரனும் திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி கிராமத்தை ஒட்டி 1947ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று காந்திகிராமத்தை நிறுவினர்.

அன்று சௌந்தரம் - ராமச்சந்திரன் தம்பதியால் 2 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட காந்தி கிராமம், இன்றோ 350 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது. ஆரோக்கிய சேவகர் என்று அழைக்கப்பட்ட தன்னார்வப் பெண்களுக்கு அடிப்படை மருத்துவம் சொல்லிக்கொடுக்கப்பட்டு, கிராமப்புறப் பெண்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்ய வழிவகை செய்யப்பட்டது. மருத்துவமனை இல்லாத கிராமங்களில் செவிலியர்களாகவும் பள்ளிகள் இல்லாத கிராமங்களில் இவர்கள் ஆசிரியர்களாகவும் இருந்தனர்.

ஆரம்பப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட காந்தி கிராமப் பள்ளி, கல்லூரியாகி பிறகு 1976ஆம் ஆண்டு காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக பிரமாண்ட வளர்ச்சியை அடைந்தது.

காந்திகிராமம் பல்கலைக்கழகம்
காந்திகிராமம் பல்கலைக்கழகம்

இதோடு நின்றுவிடவில்லை. 1952 மற்றும் 1957ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டார் சௌந்தரம். சட்டப்பேரவை உறுப்பினராக பேரவைக்குள் நுழைந்த சௌந்தரம், அங்கும் தனது புரட்சியைத் தொடங்கினார். பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதையும் நிறைவேற்றி, பெண்களின் வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதற்கு உற்ற துணையாக இருந்தவர் அவரது வாழ்க்கைத் துணை.

புரட்சிப் பெண் சௌந்தரத்தின் சேவை பேரவையோடு நின்றுவிடுமா என்ன? அடுத்து 1962ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்வானார். அவரது திறமையால் வியந்து போன நேரு, கல்வித்துறை துணை அமைச்சராக நியமித்தார். தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மத்திய அமைச்சரவையில் துணை அமைச்சராக பதவியேற்றது அதுவே முதல் முறை என்பதால் தமிழகப் பெண்களுக்கு பெருமைசேர்க்கும் வகையில் அந்த நிகழ்வு பார்க்கப்பட்டது.

நேரு, இந்திராவுடன் சௌந்தரம்
நேரு, இந்திராவுடன் சௌந்தரம்

துணை கல்வி அமைச்சரானால் சும்மா இருப்பாரா சௌந்தரம். நாட்டில் கல்வி புரட்சியை ஏற்படுத்தாமலா இருந்திருப்பார். ஆம். தொடக்கக் கல்வியை நாடு முழுவதும் இலவசமாக்கினார். நாட்டு நலப்பணித் திட்டத்தை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குக் கொண்டு வந்தார். கல்வித் துறையில் பல முக்கிய பணிகளை செய்தார். அவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு. சௌந்தரத்தின் பெருமையை நாடறியச் செய்யும் வகையில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

பிறகு 1967ஆம் ஆண்டு திண்டுக்கல் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர் அரசியலிலிருந்து விலகி, முழு நேர நலப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார்.  1984ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சௌந்தரம் காலமானார். ஆனால் அவர் தொடங்கிய பணிகள் எதுவும் முடங்காமல் சீராக செயல்படும் வகையில் ஏற்கனவே எல்லாவற்றையும் செய்துவைத்திருந்தார். 

ஜி. ராமச்சந்திரன் கேரளம் திரும்பி, மீண்டும் சமூகப் பணியை ஆற்றினார். பள்ளிகளைத் திறந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். கேரள மாநில சுகாதார மற்றும் கல்வித் துறை அமைச்சராகவும் மக்களுக்கு சேவையாற்றினார். இவர்தான் காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் நிறுவனராகவும் முதல் துணைவேந்தராகவும் இருந்தவர். இவர் எழுதிய சுயசரிசை நூல் லட்சக்கணக்கானோருக்கு உந்துசக்தியாக இருந்துள்ளது. 

இவர் ஏற்படுத்திய தூய்மைநலப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும், கிராம சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு மையம், கஸ்தூரிபா மருத்துவமனை ஆகியவை பல விருதுகளை வென்று, தேசிய அங்கீகாரம் பெற்றன.

காந்திகிராம் பல்கலைக்கழகமானது பல லட்சம் பேருக்கு கல்வி பயிற்றுவித்து, இன்றும் கல்விச் சேவையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சௌந்தரம் - ராமச்சந்திரன் புரட்சிகர காதல், அவர்களை காந்திய வழியில் சென்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று காந்திகிராமத்தை உருவாக்கவும் உந்துசக்தியாக இருந்துள்ளது.

ஒடுக்கப்பட்டோரையும், ஒதுக்கப்பட்டோரையும் உள்வாங்கி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பணியை செய்துவந்த சௌந்தரம் - ராமச்சந்திரன் தம்பதியின் மகத்தான பணி தடம் பிறழாது இன்று வரை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது காந்தி கிராமம்.

இருவரும் கொண்ட காதல் அவர்களையும், அவர்கள் மூலம் இந்த சமூகத்தையும் உயர்த்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com