மருத்துவத்தில் மலர்ந்த காதல்!

இன்பம், துன்பம் அனைத்திலும் யாதுமாகி இருக்கிறோம் என வளரிளம் காதலர்களுக்கு எடுத்துரைக்கும் காதல் தம்பதி நாமக்கல் மருத்துவ இணையர் குழந்தைவேல்–மல்லிகா . 
மருத்துவத்தில் மலர்ந்த காதல்!

அழகும், அழகும் சேர்வதல்ல காதல், அன்பும், அரவணைப்பும் சேர்ந்திருப்பதே காதல்; உருவத்தைப் பார்த்து வருவதல்ல காதல், உள்ளத்தை பார்த்து வருவதே காதல், இருவராக இல்லாமல் மனங்களால் ஒருவராகி, இன்பம், துன்பம் அனைத்திலும் யாதுமாகி இருக்கிறோம் என்று காதலுக்கான புதிய வரிகளை வளரிளம் காதலர்களுக்கு எடுத்துரைக்கும் காதல் தம்பதியான நாமக்கல் தமிழ் சங்கத் தலைவரும், பிரபல தங்கம் புற்றுநோய் மருத்துவமனை நிர்வாக இயக்குநருமான இரா.குழந்தைவேல்–மல்லிகா குழந்தைவேல் இணையர்.

'சிறு வயது முதலே படிப்பு மீது மிகுந்த நாட்டம் உண்டு. மருத்துவராக வேண்டும் என்ற உயிர்த் துடிப்போடுதான் ஒவ்வொரு நாள்களையும் கடந்தோம். சாதாரண சமூகம், கிராமிய சூழல் நிறைந்த பகுதி, அதிகம் பயிலாத தாய், தந்தையர், அரசுப் பள்ளி படிப்பு.. இவ்வாறானதுதான் எங்களது பள்ளிப் பருவம்' என்கின்றனர் இந்தத் தம்பதியர். 

மருத்துவர் குழந்தைவேல் கூறுகையில், நல்ல மதிப்பெண்களோடு பள்ளியை விட்டு கல்லூரியை நோக்கிச் சென்றேன். திருச்சி புனித சேவியர் கல்லூரியில் சீட் கிடைத்தது. ஆங்கில அறிவு, பொது அறிவு குறைவான நிலையில், அங்கிருந்த ஏராளமான மாணவர்களுடன் போட்டி போடும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். விடா முயற்சியும், மருத்துவராக வேண்டும் என்ற அதீத வெறியும் 32–ஆம் நிலையில் இருந்து (ரேங்க்) மூன்றாம் இடத்திற்கு என்னை முன்னேற்றியது. அதன்பிறகு, சென்னை ஸ்டான்லி  அரசு மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னுடன் படித்தவர்களில்,  ஆண் நண்பர்களைக் காட்டிலும் பெண் நண்பர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அந்த நட்பு வட்டம் 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தொடர்கிறது. 

பட்ட மேற்படிப்புக்காக(எம்.டி) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போதுதான், மல்லிகா... உன் மன்னன் மயங்கும் பொன்னான பெயரல்லவோ...என்பது போன்று அவரைப் பார்த்தேன்' என்றார். 

'எங்கள் வாழ்க்கைப் பாதையில் திருப்பம்அங்கு தான் தொடங்கியது. குழந்தைவேலாயுதன் பெயர் கொண்ட குழந்தைவேலனாய் இருந்த அவரை எனக்கு பார்த்த நொடியிலேயே பிடித்துப்போனது. மனதிற்கு இனிய, காட்சிக்கு எளிய, இனிமையான சுபாவம் கொண்ட, தெய்வபக்தியும். உற்றாரை அரவணைக்கும் பாங்கும் கொண்ட ஒருவரை(இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள) மிகவும் பிடித்ததில் தவறில்லையே. நட்பில் தொடங்கிய இருவரது பார்வையும் காலப்போக்கில் காதலாக மலர்ந்தது. கவனம் பிசாகாமல், கண்ணியம் குறையாமல் எங்களுடைய காதல் காலம் ஓராண்டு வரை நீடித்தது. அதன்பிறகு வழக்கம்போல் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணத்தில் முடிந்தது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக மகிழ்ச்சியுடன் எங்களுடைய இல்லறம் நல்லறமாக இருந்து வருகிறது. செம்புலப்புயல் நீர்போல் இணைந்து மூன்று முத்துக்களாய் மக்களைப் பெற்று ஊர் மெச்சும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். எத்தனை மேடுகள், எத்தனை பள்ளங்கள், அனைத்தையும் கடந்து வந்துள்ளோம். ஒரு விதையில் தொடங்கிய காதல், செடியாக வளர்ந்து ஆலமர விருட்சமாக வானோக்கி நிற்பது எங்களுடைய காதலுக்கு கிடைத்த வெற்றி. நேர்மையும், நம்பிக்கையும் இருந்தால் எல்லாக் காதலும் வெற்றிக் காதல்தான். வாழ்க்கையை நெறிப்படுத்திய, சீர்படுத்திய, தெளிவுப்படுத்திய வகையில், இன்றுபோல் என்றும் வாழ வேண்டும் என அன்றைய காதலர்களாய், இன்றைய தம்பதியராய் நாங்களே ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். காதல் புனிதமானது...தூய்மையான முறையில் கடைபிடிக்கும் அனைவருக்குமே' என இன்றும் காதலுடன் மலர்கிறார் மல்லிகா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com