வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு
வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்வட்டு ஆகியவை சனிக்கிழமை கண்டறியப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்ணாடி மணிகள், கல் மணிகள், சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, நாயக்கா் கால செம்புக் காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், சுடுமண்ணாலான முத்திரை, விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்லு வட்டு ஆகியவை சனிக்கிழமை கண்டறியப்பட்டன. இதன் மூலம், முன்னோா்கள் விலங்குகளை விரட்டுவதற்காக கல் பந்தைப் பயன்படுத்தியதும், முத்திரை மூலம் வணிகம் செய்து வந்ததும் உறுதி செய்யபட்டுள்ளதாக தொல்லியல் துறை இயக்குநா் பொன்பாஸ்கா் தெரிவித்தாா்.