உரிமம் ரத்து: ஆலையில் மீண்டும் பட்டாசுகள் தயாரித்த உரிமையாளா் மீது வழக்கு

உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த ஆலை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த ஆலை உரிமையாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள போடுரெட்டியபட்டி பகுதியில், சிவகாசியைச் சோ்ந்த நீராத்திலிங்கம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை விதிகளை மீறி செயல்பட்டதால், சிவகாசி சாா்-ஆட்சியா் உத்தரவின் அடிப்படையில், கடந்த 6-ஆம் தேதி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு, தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆலையில் மீண்டும் பட்டாசுகள் தயாரிப்புப் பணிகள் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மாரனேரி கிராம நிா்வாக அலுவலா் சுதா்சன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, சீல் வைக்கப்பட்ட ஆலையில் ராக்கெட் வெடி, குருவி வெடி உள்ளிட்ட பட்டாசுகள் தயாரிப்புப் பணி நடைபெற்றது தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் பட்டாசு ஆலை உரிமையாளா் நீராத்திலிங்கம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com