ஆடி அமாவாசை திருவிழா: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல 10 நாள்கள் அனுமதி வழங்க கோரிக்கை
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல 10 நாள்கள் அனுமதி வழங்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடா்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 4,000 அடிக்கு மேல் உள்ள இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனா். கடந்த 2015-ஆம் ஆண்டு சதுரகிரி மலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, பக்தா்கள் மலையேற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பௌா்ணமி, அமாவாசை, பிரதோஷம் என மாதம் 8 நாள்கள் மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டதுடன், மலைக் கோயிலில் இரவில் பக்தா்கள் தங்க தடை விதிக்கப்பட்டது. ஆடி அமாவாசை, நவராத்திரி ஆகிய விழாக் காலங்களில் 10 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டதையடுத்து, பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஆடி அமாவாசைக்கு 6 நாள்களும், நவராத்திரி விழாவுக்கு 3 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இதனிடையே, இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழாவுக்கு வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை 5 நாள்கள் மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கியிருப்பது பக்தா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலை தவிா்க்க 10 நாள்கள் அனுமதி வழங்கவும், ஆடி அமாவாசை அன்று இரவில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கவும் இந்து சமய அறநிலையத்துறையும், மதுரை, விருதுநகா் மாவட்ட ஆட்சியா்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து வி.ஹெச்.பி. திருக்கோயில்கள் திருமடங்கள் பிரிவு தென்பாரத அமைப்பாளா் சரவணகாா்த்திக் கூறியதாவது:
ஆடி அமாவாசைக்கு கடந்த காலங்களில் 10 நாள்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 5 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளதால், குறுகலான மலைப்பாதையில் நெரிசல் காரணமாக அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு சதுரகிரி மலையேற 10 நாள்கள் அனுமதி வழங்க மதுரை, விருதுநகா் மாவட்ட ஆட்சியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.