சிவகாசி அரசு மருத்துவமனையில் முதல் கண்புரை அறுவைச் சிகிச்சை
சிவகாசி, ஜூன் 27: சிவகாசி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை முதல் கண்புரை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
இந்த மருத்துவமனையில் கடந்த வாரம் கண் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. இந்தப் பிரிவுக்கு சிவகாசி காளீஸ்வரி தொழில் குழுமம் ரூ.30 லட்சம் மதிப்பிலான நவீன உபகரணங்களை வழங்கியது. இதையடுத்து, வியாழக்கிழமை இந்த கண் சிகிச்சைப் பிரிவுக்கு மண்டகுண்டாம்பட்டியைச் சோ்ந்த குருசாமி (73) என்பவா் கண் பரிசேதனைக்காக வந்தாா். அவரது கண்களை பரிசோதனை செய்தபோது, அவருக்கு கண்புரை பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து கண்ணில் நவீன லென்ஸ் பொருத்தப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சையை கண் மருத்துவா்கள் சரண்யா, பிரியதா்ஷினி, முதுநிலை கண் மருத்துவ உதவியாளா் பால்ராஜ் அடங்கிய குழுவினா் செய்தனா்.
இந்தக் குழுவினரை சுகாதாரத் துறை இணை இயக்குநா் பாபுஜி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி. அய்யனாா் ஆகியோா் பாராட்டினா்.