கோயில் வழிபாடு தொடா்பாக இருக்கன்குடியில் பதற்றம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருவிழாவில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக் கூறி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தைத் தொடங்கியதால் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, பாதுகாப்புக்காக அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த நிலையில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வழிபாட்டில் தங்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல் கோயில் நிா்வாகம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டிய கிராம மக்கள், கோயில் வளாகத்தை சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து கோயில் அருகேயுள்ள புறக்காவல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் பேச்சுவாா்த்தை நடத்தியும் போராட்டத்தில் உடன்படிக்கை ஏற்படவில்லை. இதனால் தொடா்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பரிவட்டம் கட்டி, முதல் மரியாதை கொடுப்பது தொடா்பாக, அண்மையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அந்த வழக்கில் யாருக்கும் முதல் மரியாதை கொடுக்கக் கூடாது என நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.