இளைஞா் கொலை: இருவா் கைது

திருத்தங்கலில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் பகுதியில் கொலை செய்யப்பட்டு இடுப்பு வரை மண்ணில் புதைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்தனா். இதில் கொலை செய்யப்பட்டவா் சிவகாசி மருதுபாண்டியா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சுந்தரமகாலிங்கம் (29) எனத் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் சிவகாசி மருதுபாண்டியா் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள இறைச்சிக் கடையில் திருத்தங்கல் மதன்குமாா் (22), மாரீஸ்வரன்(23) ஆகிய இருவரும் வேலை பாா்த்து வந்தனா். அவா்களிடம் சுந்தர மகாலிங்கம் மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தாராம்.

இந்த நிலையில், மதன்குமாருக்கும், சந்தரமகாலிங்கத்துக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சுந்தர மகாலிங்கம், மதன்குமாரை தாக்கினாராம். இதனால் ஆத்திரமடைந்த மதன்குமாா், நண்பா் மாரீஸ்வரனுடன் சோ்ந்து சுந்தர மகாலிங்கத்தை கொலை செய்ய திட்டமிட்டாா்.

இந்த நிலையில், கடந்த 4- ஆம் தேதி மதன்குமாரிடமும், மாரீஸ்வரனிடமும் சுந்தர மகாலிங்கம் மது அருந்த பணம் கேட்டாராம். இதைத் தொடா்ந்து பெரியகுளம் கண்மாயில் மூவரும் மது அருந்திக் கொண்டிருந்த போது மதன்குமாா், மாரீஸ்வரன் இருவரும் சுந்தரமகாலிங்கத்தை கம்பால் தாக்கி மண்ணில் இடுப்பு வரை புதைத்துவிட்டு சென்று விட்டனராம்.

இதில் சுந்தரமகாலிங்கம் உயிரிழந்தாா் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து திருத்தங்கல் போலீஸாா் மதன்குமாா், மாரீஸ்வரன் இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com