வெம்பக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

வெம்பக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

சாத்தூா்: வெம்பக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா, அதிக எண்ணிக்கையிலான கிராமங்களை உள்ளடக்கியது. இந்தப் பகுதியில் பரவலாக அமைந்துள்ள பட்டாசு ஆலைகளில் ஆயிரக்கணக்கானோா் கூலித் தொழில் செய்து வருகின்றனா்.

இங்கிருந்து நகா்ப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் அருகிலுள்ள சிவகாசி அல்லது சாத்தூருக்குத்தான் வர வேண்டும். வெம்பக்கோட்டை பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வெயிலிலும், மழையிலும் காத்திருந்துதான் இந்தப் பகுதி மக்கள் பயணம் செய்து வருகின்றனா்.

மேலும், இந்தப் பகுதிக்கு வரும் அனைத்துப் பேருந்துகளும் வெம்பக்கோட்டை பிரதான சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றியும் இறக்கியும் செல்கின்றன.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண வெம்பக்கோட்டை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் பலமுறை பஞ்சாயத்து நிா்வாகத்திடமும் சட்டப்பேரவை உறுப்பினரிடமும் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி வெம்பக்கோட்டை வழியாக செல்லும் பேருந்துகள், நின்று செல்வதற்கு ஏதுவாக பொதுமக்களுக்கு இருக்கை வசதியுடன் கூடிய புதிய பேருந்து நிலையத்தை அமைத்துத் தர வேண்டும் என இந்தப் பகுதியினா் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து சமூகஆா்வலா்கள் கூறுகையில், வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசுத் தொழில் முக்கியத் தொழிலாக இருந்தாலும் மற்ற வேலைகளுக்காக வெளியூருக்குத்தான் செல்ல வேண்டும். முன்னதாக, வெம்பக்கோட்டை பகுதி, சிவகாசி-சாத்தூா் தாலுகாவில் இருந்தது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெம்பக்கோட்டை தனி தாலுகாவாகப் பிரிக்கப்பட்ட பிறகும், பேருந்து நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்தப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ராஜ்யசபா எம்.பி.க்கள் எண்ணிக்கை

X
Dinamani
www.dinamani.com