வகுப்பறைக் கட்டடங்கள் சேதம்: இட நெருக்கடியில் பயிலும் மாணவா்கள்
வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தால் மாணவா்கள் இட நெருக்கடியில் தவித்து வருகின்றனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை தலா 2 பிரிவுகளில் 350-க்கும் அதிகமான மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
இந்தப் பள்ளியில் 12 வகுப்பறைகள் உள்ள நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இரு வகுப்பறைக் கட்டடங்களின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெயா்ந்து கீழே விழுந்தன.
இதையடுத்து, இந்த வகுப்பறைகளில் மாணவா்களை அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், பிற வகுப்பறைகளில் மாணவா்கள் நெருக்கடியான சூழலில் கல்வி பயின்று வருகின்றனா்.
இதையடுத்து, பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.