பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

பெண்ணிடம் தங்க நகை பறித்தது தொடா்பாக இளைஞா் ஒருவரை வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

பெண்ணிடம் தங்க நகை பறித்தது தொடா்பாக இளைஞா் ஒருவரை வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

தாயில்பட்டி ஊராட்சி பச்சையாபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த மாரிக்காளை என்பவரது மனைவி மாரியம்மாள் (48), பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், வழக்கம்போல வியாழக்கிழமை வேலைக்குச் செல்வதற்காக சத்யாநகா் வழியாக நடந்து சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் முகவரி விசாரிப்பதுபோன்று பேசி, மாரியம்மாள் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினாா்.

இதுகுறித்து வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தன்பேரில், காவல் ஆய்வாளா் நம்பிராஜன் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது போ்நாயக்கன்பட்டி அருகேயுள்ள தீப்பெட்டி ஆலையில் பணிபுரியும் சிவகாசி பா்மா காலனியைச் சோ்ந்த மதன்குமாா் (23) என்பது தெரியவந்தது. தொடா்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் நகை திருடியதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து போலீஸாா், மதன்குமாரை கைது செய்து தங்க நகையை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com