ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

பணிகள் முடிவுற்ற நிலையில் திறக்கப்படாமல் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ. 5.31 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய வட்டாட்சியா் அலுவலகம் கட்டுமானப் பணி முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாததால் பொதுமக்கள், அதிகாரிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே பீடா் சாலையில் 1975-ஆம் ஆண்டு வட்டாட்சியா் அலுவலகம் கட்டப்பட்டது. பின்னா், போதிய இடவசதி இல்லாததால் நில அளவையா் அலுவலகம், இ-சேவை மையம், ஆதாா் மையம் ஆகியவற்றுக்கு அதே வளாகத்தில் தனிக் கட்டடம் கட்டப்பட்டது. வட்டாட்சியல் அலுவலகக் கட்டடம் 50 ஆண்டுகள் பழைமையானதாலும், போதிய இடவசதி இல்லாததாலும் புதிய வட்டாட்சியா் அலுவலகம் கட்டுவதற்கு ரூ. 5.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய அலுவலகக் கட்டுமானப் பணியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமைச்சா் சாத்தூா் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். அப்போது, ஓராண்டுக்குள் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

13,351 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் என இரு தளங்களாக, பொதுமக்கள் காத்திருப்பு அறை, அவசரக் கட்டுப்பாட்டு அறை, அனைத்துப் பிரிவு அலுவலகங்களுக்கு தனித்தனி அறைகளுடன் ஒருங்கிணைந்த அலுவலகமாக புதிய வட்டாட்சியா் அலுவலகம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணி முடிந்து இரு மாதங்களுக்கு மேலாகியும், வட்டாட்சியா் அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள், அதிகாரிகள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

ராஜபாளையத்தில் தற்காலிகமாக இயங்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆதிதிராவிடா் தனி வட்டாட்சியா் அலுவலகம், பழைய வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட திட்டமிட்ட நிலையில், புதிய அலுவலகம் திறக்கப்படாததால் தாமதம் நிலவுகிறது. இதனிடையே, ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள், அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com