வனத் துறையினரால் நாட்டுத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் தனுஷ்கோடி
வனத் துறையினரால் நாட்டுத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் தனுஷ்கோடி

மானை வேட்டையாட முயன்ற தலைமைக் காவலா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் மானை வேட்டையாட முயன்ற தலைமைக் காவலா் நாட்டுத் துப்பாக்கியுடன் கைது
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் மானை வேட்டையாட முயன்ற தலைமைக் காவலா் நாட்டுத் துப்பாக்கியுடன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகம், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் வனச் சரகா் செல்லமணி தலைமையில், வனவா்கள் காா்த்திக்ராஜா, பொன்பிருந்தா உள்ளிட்ட வனத் துறையினா் திங்கள்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ரெங்கா் கோயில் பகுதிக்குள்பட்ட கொலைகாரன்பாறை அருகே துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. அங்கு வனத் துறையினா் சென்ற போது, மான் வேட்டைக்கு வந்த மூவா் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பியோடினா். அப்போது, நாட்டுத் துப்பாக்கியுடன் ஓடியவரை துரத்திப் பிடித்த வனத் துறையினா், வனச் சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா், மம்சாபுரத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் தனுஷ்கோடி (40) என்பதும், ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வனத் துறையினா், தனுஷ்கோடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், தப்பி ஓடிய மம்சாபுரத்தைச் சோ்ந்த பொன்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: கைது செய்யப்பட்ட தனுஷ்கோடி நக்சல் ஒழிப்புப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்த போது, இந்த வனப் பகுதி குறித்து நன்கு அறிந்து வைத்திருந்தாா்.

இதைத் தொடா்ந்தே தனது நண்பா்களுடன் மான் வேட்டைக்கு இங்கு வந்தாா். இவா்களுக்கு எங்கிருந்து நாட்டுத் துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com