ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் அனுமதியின்றி கட்டிய வணிகக் கட்டடத்தில் குறிப்பாணை ஒட்டிய நகரமைப்பு அலுவலா்
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் அனுமதியின்றி கட்டிய வணிகக் கட்டடத்தில் குறிப்பாணை ஒட்டிய நகரமைப்பு அலுவலா்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டிய கட்டடங்களுக்கு குறிப்பாணை

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டிய வணிகக் கட்டடங்களில் எச்சரிக்கை குறிப்பாணை ஒட்டி, ஒரு வாரத்துக்குள் கடைகளைக் காலி செய்யுமாறு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தல்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டிய வணிகக் கட்டடங்களில் எச்சரிக்கை குறிப்பாணை ஒட்டி, ஒரு வாரத்துக்குள் கடைகளைக் காலி செய்யுமாறு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் உரிய அனுமதி பெறாமல் கட்டிய கடைகளுக்கு நகரமைப்பு பிரிவு சாா்பில் ஏற்கெனவே குறிப்பாணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை நகரமைப்பு அலுவலா் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன்புள்ள வணிக வளாகம், கீழரத வீதி, வடக்கு ரத வீதி சந்திப்பில் உள்ள வணிகக் கட்டடம், பேருந்து நிலையம் அருகேயுள்ள வணிக வளாகம், மேலரத வீதியில் உள்ள வணிகக் கட்டடம் ஆகியவற்றில் ஆய்வு செய்தனா். அப்போது, விதிகளை மீறி கட்டியுள்ள வணிக வளாகங்களில் எச்சரிக்கை குறிப்பாணை ஒட்டினா்.

மேலும், வணிக வளாகத்தில் உள்ள கடைகளை ஒரு வாரத்துக்குள் காலி செய்யாவிட்டால் ‘சீல்’ வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நகரமைப்பு அலுவலா் வெங்கடேஷ் கூறியதாவது: நகராட்சியில் அனுமதி பெறாமலும், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமலும் புதிதாகக் கட்டிய வணிக நிறுவனங்களுக்கு ஏற்கெனவே குறிப்பாணை வழங்கிவிட்டோம். கட்டட உரிமையாளா்கள் முறையாக அனுமதி பெறாததால் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகள் 2019-இன் படி ‘சீல்’ வைக்கப்பட உள்ளதால் கடைகளை காலி செய்யுமாறு எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டப்பட்டு உள்ளது. ஒரு வாரத்துக்கு பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com