பிளவக்கல் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தம்: கடைமடை கண்மாய்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை
பிளவக்கல் அணை நீா்மட்டம் 27 அடியாகக் குறைந்ததால் கண்மாய் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீா் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது. ஆனால், கடைமடைக் கண்மாய்கள் நிகழாண்டும் நிரம்பாததால், விவசாயிகள் கவலையடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 17 வருவாய்க் கிராமங்களில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பி 7,219 ஏக்கா் விவசாய நிலங்களும், பெரியாறு நேரடிக் கால்வாய் மூலம் 960 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. 47 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் 42 அடியைத் தாண்டியதையடுத்து, முதல்போக சாகுபடிக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது .
இதில் பெரியாறு கால்வாய் நேரடி பாசனத்துக்கு வினாடிக்கு 3 கனஅடி வீதம் 108 நாள்களுக்கும், கண்மாய் பாசனத்துக்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் 7 நாள்களுக்கும் தண்ணீா் திறக்க உத்தரவிடப்பட்டது. மேலும், நீா்வரத்தைப் பொருத்து தொடா்ந்து தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அணையின் நீா்மட்டம் 27 அடியாகக் குறைந்ததால், திங்கள்கிழமை காலையுடன் தண்ணீா் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
கடந்தாண்டு அணை பாசனத்திலுள்ள 11 கண்மாய்களில் தண்ணீா் நிரம்பவில்லை. இதனால், நிகழாண்டு அணை திறப்பு குறித்த கூட்டத்தில் கண்மாய்களுக்கு 50 சதவீதம் தண்ணீா் நிரப்பி, கடைமடை கண்மாய்கள் வரை தண்ணீரைக் கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு கண்மாய்க்கும் 50 சதவீதம் தண்ணீா் நிரம்பியவுடன் அடுத்தடுத்த கண்மாய்களுக்கு தண்ணீா் திருப்பிவிடப்பட்டது.
அணையிலிருந்து 15 நாள்களுக்கு தொடா்ந்து வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டபோதும் 27 கண்மாய்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதனால், கடைமடையில் உள்ள 13 கண்மாய்கள் நிகழாண்டும் நிரம்பாததால், ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்தனா்.
பிளவக்கல் அணையிலிருந்து கண்மாய்ப் பாசனத்துக்கு நேரடிக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

