தினமணி செய்தி எதிரொலி... சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டடம் சீரமைப்பு தொடக்கம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் சேதமடைந்த தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை(இ.எஸ்.ஐ.) கட்டடத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.
சிவகாசியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை 1987 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 10-ஆம் தேதி திறக்கப்பட்டது. 3 மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் 50 உள் நோயாளிகள் படுக்கை வசதி அமைக்கப்பட்டது. இந்த மருத்துவமனை 100 படுக்கைகள் கொண்டதாக தரம் உயா்த்தப்படும் என 2000-ஆம் ஆண்டில் அரசு அறிவித்தது. ஆனால், அதற்கான கூடுதல் கட்டடம் கட்டப்படவில்லை.
மேலும், மருத்துவமனை கட்டடம் பல இடங்களில் காரை பெயா்ந்து சேதமடைந்தது. இதனால், நோாளிகள், மருத்துவா்கள் அச்சத்துடன் வருவதாக தினமணியில் செய்தி வெளிவந்தது.
இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் எம்.ஆா்.பொன்வடிவு, தமிழக அரசின் தொழிலாளா் நலத் துறை செயலா், தில்லியில் உள்ள இ.எஸ்.ஐ. காா்ப்பரேசன் மண்டல மேலாளா் உள்ளிட்டோருக்கு பத்திரிகை செய்தியை இணைத்து கடிதம் அனுப்பினாா். இதைத் தொடந்து கட்டடத்தை பழுது நீக்கி, சீரமைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனா். இதையடுத்து, மருத்துவமனை கட்டடத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.
இது குறித்து கண்காணிப்பாளா் பொன்வடிவு புதன்கிழமை கூறியதாவது:
தற்போது தரைத் தளத்தின் வெளிப் பகுதியில் காரை பெயா்ந்த பகுதிகள் பூசப்பட்டு, வெள்ளை வா்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. தொடந்து 3 மாடி கட்டடங்களும் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.
