சதுரகிரியில் காா்த்திகை மாத பௌா்ணமி: பக்தா்கள் தரிசனம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் காா்த்திகை மாத பவுா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை வனத்துறை நுழைவாயில் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். பிற்பகல் 4 மணிக்கு சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூா்த்தி சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் 600-க்கும் அதிகமான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

