~

ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

மம்சாபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மம்சாபுரம் பேரூராட்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மருத்துவம், மகப்பேறு, சித்த மருத்துவம், கண் சிகிச்சை பிரிவுகள் உள்ளன. 10 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி 150 போ் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இட நெருக்கடி, கட்டடம் சேதமடைந்ததால் நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதையடுத்து, 15-ஆவது நிதி ஆணையம் 2023 - 2024 சுகாதாரத் துறை மானிய திட்டத்தின்கீழ் புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அதே வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதையடுத்து, புதிய ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்வதற்கான பாதை, சுற்றுச்சுவா் வசதி ஏற்படுத்தி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com