கல்குவாரி அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்
சாத்தூா் அருகே கல்குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள ஏ. லட்சுமியாபுரம் கிராமத்தில் புதிதாக தனியாா் கல்குவாரி அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், கல்குவாரி அமைக்கப்பட்டால் கிராமத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீா் ஆதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதால் கல்குவாரி அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்று வெம்பக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், கிராம மக்களுடன் இணைந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
