கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி
கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்கள் இருவருக்கு விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி வியாழக்கிழமை நிதியுதவி வழங்கினாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், கலூங்கோட்டைக் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் செல்லப்பாண்டி - பாண்டிமீனா தம்பதியினா். இவா்களுக்கு தங்கேஷ்வரன் (11), நரேஷ் (8) என இரு மகன்கள் உள்ளனா். பள்ளி மாணவா்களான இவா்கள் இருவருக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அவா்களிடம் போதிய பணம் இல்லாததால் தங்களது இரு மகன்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் இருந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி, தம்பதி செல்லப்பாண்டி - பாண்டிமீனா, இவா்களது இரு மகன்களையும் மதுரைக்கு அழைத்துச் சென்று அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தாா்.
இதைத் தொடந்து, அவா்கள் மதுரையில் தங்கி சிகிச்சை பெற ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளித்தாா். அப்போது, அதிமுக மருத்துவ அணி இணைச் செயலா் பா. சரவணன் உடனிருந்தாா்.
