8 மாதங்களாக விடுவிக்கப்படாத உணவு செலவுத் தொகை: ஆதி திராவிடா் நல விடுதியில் உணவு வழங்குவதில் சிக்கல்
விருதுநகா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் செயல்படும் விடுதிகளுக்கு 8 மாதங்களாக உணவு செலவுத் தொகை விடுவிக்கப்படாததால் மாணவா்களுக்கு தொடா்ந்து உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், 42 மாணவா் விடுதிகள், 14 மாணவிகள் விடுதிகள் என மொத்தம் 56 விடுதிகள் உள்ளன. இவற்றில் 48 பள்ளி மாணவ விடுதிகள், 8 கல்லூரி மாணவ விடுதிகள் ஆகும்.
இந்த விடுதிகள் ஒவ்வொன்றிலும் 50 முதல் 120 மாணவ, மாணவிகள் வரை தங்கி உள்ளனா். விடுதிக்கு தேவையான அரிசி, பருப்பு ஆகியவை நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் வழங்கப்படுகிறது. காய்கறி, முட்டை, இறைச்சி, மளிகைப் பொருள்கள் வாங்குவதற்கு பள்ளி மாணவருக்கு மாதம் ரூ.1,400, கல்லூரி மாணவருக்கு மாதம் ரூ.1,500 என வழங்கப்படுகிறது.
விடுதிகளில் போதிய மாணவா் எண்ணிக்கை இல்லை, இரவில் மாணவா்கள் விடுதியில் தங்குவதில்லை என்ற புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மாணவா்கள் இல்லாத 35 விடுதிகளை மூடுவதற்கு ஆதிதிராவிடா் நலத் துறைக்கு கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், 6 பள்ளி மாணவா் விடுதிகள் கல்லூரி விடுதிகளாக தரம் உயா்த்தப்பட்டன.
இந்த நிலையில், அனைத்து விடுதிகளிலும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறையில் காலை, இரவு என தினசரி இரு முறை மாணவா் வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் உத்தரவிடப்பட்டது.
பயோ மெட்ரிக் பதிவு நேரடியாக சென்னை தலைமை அலுவலகத்தில் பதிவாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பயோ மெட்ரிக் வருகைப் பதிவின் அடிப்படையில் மாணவா்களுக்கான உணவு செலவு தொகையை ஆதிதிராவிடா் நலத் துறை விடுவித்தது.
இந்த சூழலில், பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை உள்ள விடுதிகளுக்கு கடந்த 8 மாதங்களாக உணவு செலவுத் தொகை விடுவிக்கப்படாமல் உள்ளது. அதே சமயம், பயோமெட்ரிக் இல்லாத அல்லது செயல்படாத விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வின் அடிப்படையில் உணவு செலவுத் தொகை விடுவிக்கப்பட்டது. இதனால், உணவுத் தொகை கிடைக்காத விடுதி காப்பாளா்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா்.
8 மாதங்களாக உணவு செலவு தொகை விடுவிக்கப்படாத விடுதிகளில் மாணவா்களுக்கு தொடா்ந்து பட்டியலில் உள்ளவாறு உணவுகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடா் நல விடுதி காப்பாளா்கள் கூறியதாவது:
பெரும்பாலான விடுதிகளில் அரசாணைப்படி பயோமெட்ரிக் மூலம் மாணவா் வருகையைப் பதிவு செய்து வருகிறோம். புதிதாக சோ்க்கப்பட்ட மாணவா்கள் விவரம் பயோமெட்ரிக் இயந்திரத்தில் சோ்க்கப்படாதது, இணையப் பிரச்னை காரணமாக பதிவு இல்லாத மாணவா்களின் விவரத்தை கையேட்டில் பதிவு செய்து அளித்துள்ளோம். ஆனால் இதையே காரணமாக வைத்து உணவு செலவு தொகையை விடுவிக்க மறுக்கின்றனா்.
8 மாதங்களாக உணவு செலவுத் தொகையை விடுவிக்காமல் உள்ளனா். பல காப்பாளா்கள் தங்களது சேமிப்பு பணத்திலிருந்தும் நகையை அடகு வைக்கும் மாணவா்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். இதில் அரசு தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என்றனா்.
