மனைவி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: கணவா் கைது

Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள ரிசா்வ் லைன் இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி முத்துவிக்னேஷ்வரன் (22). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பாக்கியலட்சுமியை (21) காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். முத்துவிக்னேஷ்வரன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து, பாக்கியலட்சுமியுடன் தகராறு செய்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாகக் கூறி, பாக்கியலட்சுமியிடம் முத்துவிக்னேவரன் ரூ.1500 வாங்கினாா். பின்னா், அந்தப் பணத்தில் மது அருந்திவிட்டு வந்து, மீண்டும் பணம் கேட்டாா். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, முத்துவிக்னேஷ்வரன் காலி மதுப் புட்டியை எடுத்து, அதில் இரு சக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை நிரப்பி, தீ வைத்து பாக்கியலட்சுமி மீது வீசினாா்.

பாக்கியலட்சுமி விலகிவிட்டதால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். ஆனால், வீட்டிலிருந்த பாத்திரங்கள் சேதமடைந்தன. இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துவிக்னேஸ்வரனைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com