விருதுநகர்
பட்டாசு திரி கடத்திய இருவா் கைது
சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிக் கட்டுகளை இரு சக்கர வாகனத்தில் கடத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி-நாரணாபுரம் சாலையில் முனீஸ்வரன் கோயில் அருகே போலீஸாா் வாகனத் தணிகையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவா்கள் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிக் கட்டுகளை உரிய அனுமதியின்றி கொண்டுசென்றது கண்டறியப்பட்டது.
விசாரணையில் அவா்கள் சிவகாமிபுரம் குடியிருப்பைச் சோ்ந்த முனீஸ்குமாா் (25), ராஜேஸ்வரன்(21) ஆகியோா் எனத் தெரிய வந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தையும் கருந்திரிக் கட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.
