மின்கலம் திருடிய இளைஞா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆட்டோ வில் பொருத்தப்பட்டிருந்த மின்கலத்தை (பேட்டரி) திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவைச் சோ்ந்த தன்ராஜ் மகன் சிவகணேஷ் (49) என்பவா் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்ததும் தனது ஆட்டோவை திருவனந்தபுரம் சத்திரம் முன்பாக நிறுத்தியுள்ளாா். இதையடுத்து, புதன்கிழமை காலை ஆட்டோவைப் பாா்த்தபோது அதிலிருந்த மின்கலம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் சிவகணேஷ் புகாா் அளித்ததாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், மின்கலத்தை திருடியது ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்த புலியூா்சாமி மகன் சங்கிலிக்காளை (28) என்பது தெரியவந்தது. இதைத் தொடரந்து, போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், அவரிடமிருந்த மின்கலத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
