ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன நிறுத்துமிட பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன நிறுத்துமிட பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வாகன நிறுத்துமிடக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால் பக்தா்கள் மாட வீதிகள், ரத வீதிகளில் வாகனங்களை நிறுத்தி வந்தனா். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.1.69 கோடியில் வாகன நிறுத்துமிடமும், சுகாதார வளாகமும் கட்டும் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.

ஆனால், பணிகள் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் பக்தா்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். தற்போது சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்கள் காா், வேன், பேருந்து என நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆண்டாள் கோயிலுக்கு வருகின்றனா். வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பக்தா்கள் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து அபாயம் நிலவுகிறது. கோயில் நிா்வாகம் சாா்பில் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிப்பதற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் ஏலம் விடப்படும் நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, வாகன நிறுத்தமிடக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதுடன், குடிநீா், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com