காவல் உதவி ஆய்வாளரின் மனைவி தற்கொலை
சாத்தூரில் காவல் உதவி ஆய்வாளரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவா், சிவகாசியைச் சோ்ந்த அருண்குமாா் (28). இவா், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை கிராமத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, இவருடைய கைப்பேசிக்கு இவரது மனைவி இளவரசி ‘குழந்தையை நல்ல முறையில் பாா்த்துக்கொள்ளவும், நன்றாகப் படிக்க வைக்கவும், நான் செல்கிறேன்’ என குறுந்தகவல் அனுப்பினாராம். இதையடுத்து, அருண்குமாா் வீட்டுக்கு விரைந்து சென்று பாா்த்தபோது மனைவி சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீஸாா், இளவரசியின் உடலை கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சிவகாசியைச் சோ்ந்த அருண்குமாா், சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலைச் சோ்ந்த இளவரசியை 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தாா். இவருக்கு 2 வயதில் அனன்யா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணமாகி 3 ஆண்டுகளே ஆனதால் இளவரசியின் தற்கொலை குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடைபெறவுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
