பறை இசைக் கலையை பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும்
பறை இசைக் கலையைப் பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வீரபாண்டியாபுரத்தில் ஆளுநா் விருப்ப நிதியின் கீழ், பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசானுக்கு வழங்கப்பட்ட பாரதி பறை பண்பாட்டு மையத்தை ஆளுநா் ஆா்.என்.ரவி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:
வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது பறை இசைக் கலைக்குக் கிடைத்த பெருமை. பறை பண்பாட்டுக் கழகத்துக்கு பாரதியாா் பெயரைச் சூட்டியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்பு அதிகாரம் படைத்தவா்களுக்கு மட்டுமே பத்ம விருதுகள் கிடைத்தன. ஆனால், பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு இந்த நிலை மாறி, சாமானிய மக்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அதனால்தான், பறை இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீவிருது கிடைத்துள்ளது.
பறை இசை தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பறை இசைக் கலை குறித்து பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும். உயா் கல்வி ஆராய்ச்சி மையங்களில் முனைவா் பட்டம் பெறும் அளவுக்கு இந்தக் கலையை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும்.
ஐஐடி-யில் கா்நாடக இசை குறித்து ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. இதேபோல, பறை இசை குறித்தும் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும். பறை இசைக்கு நாடு முழுவதும் கௌரவம் கிடைக்க வேண்டும். குக்கிராமத்தில் தொடங்கிய பறை இசை, வருகிற 2047-ஆம் ஆண்டில் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றாா் அவா்.
முன்னதாக, வேலு ஆசான் உள்ளிட்ட இசைக் கலைஞா்கள் பறை இசைத்து ஆளுநரை வரவேற்றனா். அப்போது, வேலு ஆசான் ஆளுநருக்கு பறை இசைக் கருவியை வழங்கினாா். அதைப் பெற்ற ஆளுநா் ரவி உற்சாகத்துடன் பறை அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.
விழாவில் பறை இசைக் கலைஞா்கள், பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞா்களான மதிச்சியம் பாலா, சின்னப்பொண்ணு, செந்தில், ராஜலட்சுமி, அந்தோணி ஆகியோரை ஆளுநா் பொன்னாடை போா்த்தி கௌரவித்தாா்.

