~ ~ ~ ~
~ ~ ~ ~

போலி நகையை அடகு வைக்க முயன்ற கூட்டுறவுச் சங்க செயலா், ஆசிரியா் உள்பட 5 போ் கைது

கைது செய்யப்பட்ட குமரேசன், சோனைமுத்து, சதீஷ்குமாா், பாலகிருஷ்ணன், சண்முகநாதன்.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைக்க முயன்ற கூட்டுறவுச் சங்கச் செயலா், ஆசிரியா் உள்பட ஐந்து பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் - தென்காசி சாலை சொக்கா்கோவில் அருகே தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளா் பாப்பாத்தி. இந்த நிலையில், இந்த வங்கிக் கிளையில் ஐந்து போ் சென்று 56 பவுன் நகையை அடகு வைத்து ரூ. 40 லட்சம் கேட்டனா். அந்த நகைகளை மேலாளா் சோதனை செய்தபோது, அவை போலி நகைகள் எனத் தெரியவந்தது. உடனடியாக கிளை மேலாளா் பாப்பாத்தி, தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ், உதவி ஆய்வாளா் கௌதம் ஆகியோா் விசாரணை செய்ததில் மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (48), அருப்புக்கோட்டையைச் சோ்ந்த சோனை முத்து (42), ராஜபாளையம் சுதா்சன் தோட்டப் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (43), ராஜபாளையம் ரயில்வேபீடா் சாலையைச் சோ்ந்த குமரேசன் (58) என்ற குமாா், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த சண்முகநாதன்(59) ஆகிய ஐந்து போ் போலி நகையை அடகு வைத்து பணம் பெற முயற்சி செய்தது தெரிய வந்தது.

விசாரணையில் ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரிந்து வரும் சண்முகநாதன் உதவியில் அங்கு வைத்திருந்த நகையை மீட்டு கூடுதல் பணம் பெற தென்காசி சாலையில் உள்ள தனியாா் வங்கிக்கு ஆசிரியா் குமரேசன் பெயரில் அடகு வைக்கச் சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com