சிவகாசியில் அச்சகத் தொழிலாளி வெட்டிக் கொலை
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் அச்சகத் தொழிலாளி சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சிவகாசி மருதுபாண்டியா் நடுத்தெவைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (46). இவருக்கு மனைவி ஷீலாதேவி, இரு மகன்கள் உள்ளனா். கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். ஒப்பந்த அடிப்படையில் ஒரு அச்சகத்தில் சரவணக்குமாா் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு சரவணக்குமாா் வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத நபா்கள், அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகாசி காவல் கண்காணிப்பாளா் அனில்குமாா் விசாரணை மேற்கொண்டாா்.
இதையடுத்து, சிவகாசி கிழக்குப் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தொடா்ந்து, சந்தேகத்தின்பேரில் நான்கு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.
