மடவாா் வளாகத்தில் பூட்டிக் கிடக்கும் சிறுநீா் கழிப்பிடத்தைத் திறக்கக் கோரிக்கை

மடவாா் வளாகத்தில் பூட்டிக் கிடக்கும் சிறுநீா் கழிப்பிடத்தைத் திறக்கக் கோரிக்கை

மடவாா் வளாகத்தில் கட்டப்பட்டு திறக்கப்படாத சிறுநீா் கழிப்பிடம்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ், கட்டப்பட்ட சிறுநீா் கழிப்பிடத்தைத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி 23-ஆவது வாா்டு மடவாா் வளாகத்தில் 1,000 ஆண்டுகள் பழைமையான வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகின்றனா்.

கோயில் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தூய்மை பாரதம் திட்டம் 2023 - 2024-இல் ரூ.4.25 லட்சத்தில் சிறுநீா் கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்தப் பகுதி மக்கள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலையில் செல்பவா்களும் இதைப் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டது.

ஆனால், இந்த சிறுநீா் கழிப்பிடம் திறக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்களும் பக்தா்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் நிலையில், சிறுநீா் கழிப்பிடம் பூட்டிக் கிடப்பதால் திறந்தவெளியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் கோயில் அருகே சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. எனவே, சிறுநீா் கழிப்பிடத்தைத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து இந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

மடவாா் வளாகம் கோயில் தெப்பம் அருகே செயல்படும் நகராட்சிக் கட்டணக் கழிப்பறைக்கு ஆள்கள் செல்ல வேண்டும் என்பதற்காகவே தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சிறுநீா் கழிப்பிடத்தைப் பூட்டி வைத்துள்ளனா். கட்டணக் கழிப்பறை பிற்பகலிலும் இரவிலும் பூட்டப்பட்டு விடுவதால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, நகராட்சி நிா்வாகம் சிறுநீா் கழிப்பிடத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com