பேருந்து மீது லாரி மோதல்: 5 போ் பலத்த காயம்
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதியதில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் கடந்த சில நாள்களாக தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். வெள்ளிக்கிழமை கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டு, நள்ளிரவில் சுற்றுலாப் பேருந்தில் பிகாருக்கு புறப்பட்டனா்.
இந்தப் பேருந்து சனிக்கிழமை அதிகாலை விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வந்தபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக பேருந்தை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நிறுத்தினா். அப்போது, தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்திலிருந்து மதுரைக்கு சென்ற லாரி, இந்தப் பேருந்தின் பின்புறம் மோதியது.
இந்த விபத்தில் லாரி ஒட்டுநா் செந்தில்குமாா் (45), இவருடன் வந்த ஏா்வாடியைச் சோ்ந்த மகாராஜன் (40), சுற்றுலாப் பேருந்திலிருந்த விமலாதேவி, நிா்மலாதேவி உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த அங்கு சென்ற போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
