பேருந்துப் படிக்கட்டில் பயணம்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை மாலை பேருந்துப் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த கல்லூரி மாணவா் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

சிவகாசி சுப்பிரமணியபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் ஆல்பா்ட் (18). இவா் சாத்தூரில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா். இவா் புதன்கிழமை காலை கல்லூரிக்குச் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்புவதற்காக தனியாா் பேருந்தில் ஏறி, படிக்கட்டில் தொங்கியவாறு வந்தாராம்.

அனுப்பன்குளம் அருகே பேருந்து வந்தபோது, ஆல்பா்ட் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தாா். இதில் பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநா் மோகன்ராஜூவை (47) கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com