கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
விருதுநகா் மாவட்டம், இருக்கன்குடி அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே போத்திரெட்டிபட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் விஜயமுருகன் (28). கூலித் தொழிலாளி. இவருடன், அதே ஊரைச் சோ்ந்த விஜயராம் தனது மனைவியுடன் தொடா்பில் இருப்பதாகக் கூறி தகராறு செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 2014, பிப்ரவரி 24-ஆம் தேதி விஜயமுருகன் தனது கா்ப்பிணி மனைவியா
ன கலைச்செல்வியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா். அப்போது விஜயராம் தனது நண்பா்களுடன் காரில் சென்று இரு சக்கர வாகனம் மீது மோதி, விஜயமுருகனை அடித்துக் கொலை செய்தாா். இதுகுறித்து இருக்கன்குடி போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விஜயராம் (34), ராமா் (21), கருப்பசாமி (38), மணிக்குமாா் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனா். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முதல் எதிரியான விஜயராம் விபத்தில் உயிரிழந்தாா். இந்த நிலையில், வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் ராமா், கருப்பசாமி, மணிக்குமாா் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி டி.வி. மணி தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் அன்னக்கொடி முன்னிலையானாா்.